கரோனா வைரஸ்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தூத்துக்குடியில் 50 பேர் கண்காணிப்பு- மாவட்ட ஆட்சியர் தகவல்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்த 50 பேர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்த 50 பேர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் விமான நிலையங்களில் 100 சதவீதம் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் 50 பேரும் அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு கணிகாணிக்கப்படுகின்றனர்.

மருத்துவக் குழுவினர் தினமும் அவர்களது வீடுகளுக்குச் சென்று, உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர். 28 நாட்களுக்கு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் கிடையாது.

மேலும், கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தனிநபர் சுத்தத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

தும்மல் இருமல் ஏற்பட்டால் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், அதிகமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்பன போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

SCROLL FOR NEXT