மலேசியாவில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘இரும்புத் தோட்டம்’. இர்ஃபான் ஜைனி கதாநாயகனாக நடித்துள்ள இதில் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ்.வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி, கலைமாமணி கே.எஸ் மணியம், நிஷா மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட மலேசிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் துவான் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.வி.எல்.டி புரொடக் ஷன் சார்பில் ஜெகன் ஜான் பீட்டர் தயாரித்துள்ளார். தினேஷ் குமார் டி.கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். இப்படத்தை, ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து ஹெவன் பிக்சர்ஸ் ஆர்.கே.கண்ணன் வெளியிடுகிறார். புலனாய்வு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
அவர் கூறும்போது,“ஒரு மாணவி மர்மமாக கொல்லப்படுகிறார், ஆசிரியர் மேல் சந்தேகம் எழுகிறது. தடயவியல் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறார். விசாரணையில் பல ரகசியங்கள் அவிழ்கின்றன. அதுதான் படம். சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இப்படம். எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம்” என்றார்.