மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான சீன அனிமேஷன் திரைப்படம் ‘நியு லாய்’ (Niu Lai). இந்த 86 நிமிடத் திரைப்படத்தைச் சீனாவின் டாலியன் நகரைச் சேர்ந்த ஜிங் உமெங்க் என்பவரும் அவருடைய தாயார் சன் லிஃபாங்கும் உருவாக்கியுள்ளனர்.
இதை உருவாக்க அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. ஆக.5-ம் தேதி, அதிக விளம்பரங்கள் ஏதுமின்றி சீனத்திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்கள் வராமல் ஆரம்பத்தில் தடுமாறியது. ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது.
இப்படத்தின் தரமற்ற அனிமேஷன் மற்றும் சில காட்சிகள் குறித்த கிண்டலான விமர்சனங்கள் சீன சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனால், ஆக. 15 முதல் மக்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். படத்தின் அபத்தமான காட்சிகளைப் பார்த்துச் சிரிப்பதற்காகவே பலர் திரையரங்குகளுக்குச் சென்றனர். அவர்கள் படம் பார்க்கும்போது சிரிப்பதும், சில காட்சிகளில் கூச்சலிட்டு ரசிப்பதுமான வீடியோக்கள் வைரலாகின.
இதனால் ‘இந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும்’ என்ற மனநிலை பார்வையாளர்களிடையே உருவானது. ஆர்வம் அதிகரிக்க, திரையரங்குகளில் படத்துக்கான காட்சிகளின் எண்ணிக்கையும் வசூலும் உயர்ந்தது. இப்படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 ஆயிரம். ஆனால், இதுவரை ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
மிகவும் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட ‘பராநார்மல் ஆக்டிவிட்டி’, ‘தி பிளேயர் விட்ச் புராஜெக்ட்’ போன்ற படங்களையே இது பின்னுக்குத் தள்ளியுள்ளது. குறைந்த செலவில் உருவான திரைப்படங்களின் வரிசையில் ‘நியு லாய்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதாவது பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது உலக சினிமா வரலாற்றிலேயே மிக அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.