கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
Tamara 2016 | Elia K. Schneider | Venezuela
பிறப்பால் ஆணாக இருந்து பெண்ணாக மாறத் தவிக்கும் திருநங்கைகளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற நாடுகளில் அவர்களெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி தங்களது அடையாளங்களை மாற்றத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்வார்கள்.
திருநங்கைகளையும் அவர்களைப் போன்ற மற்றவர்களையும் அங்கீகரித்த நாடுகளில் வீட்டை விட்டு வெளியேறுதல் நடைபெறாவிட்டாலும் அவர்களுக்கான சமூக மதிப்பு என்பதும் சமூக உரிமைகள் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளை, பிரச்சினைகளைப் பல திரைப்படங்கள் சொல்லியிருக்கின்றன. வெனிசுலாவின் திரைப்படமான 'டமாரா'வும் அவற்றுள் ஒன்று. ஆனால் அவற்றையெல்லாம் இந்த திரைப்படம் கொஞ்சம் சிறப்பு வாய்ந்ததுதான், ஏனென்றால் டமாரா அட்ரியன் (Tamara Adrian) எனும் நிஜ திருநங்கையின் வாழ்க்கையின் தாக்கத்தில் இருந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர் எலியா கே.ஸ்னைடர் குழுவினர்.
வெனிசுலாவில் வசிக்கும் டீயோவிற்கு தன் உடல் மீதான சந்தேகம் அவன் இளைஞனாக இருக்கும்போதே வெளிப்படுகிறது. பெண்களைப் போலவே உடையணிந்து பெண்ணாக மாற முடியுமா? என குழப்பத்தில் இருக்கும்போதே அவனுக்குத் திருமணம் ஆகிறது. குழந்தைகள் பிறக்கின்றன. 7 வருடங்கள் உருண்டோடியபின் இரவு நேரத்தில் சாலைகளில் திருநங்கைகள் சிலரைப் பார்த்த பின் அவனுக்குள் இருக்கும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. அதன் பின் நடப்பதை உங்கள் கண் முன்னால் 'டமாரா' விவரிக்கும்.
நமக்குத் தெரிந்த கதைகளிலும் நாம் பார்த்த சில திரைப்படங்களிலும் ஆணாய்ப் பிறந்த ஒருவனுக்கு பதின்பருவத்தில்தான் இந்த உடல் சார்ந்த மாறுபாடுகள் மனதளவில் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக சமூக நிர்பந்தத்தால் வீட்டை விட்டு வெளியேறுதல் நடைபெறும்.
ஆனால் இதில் அம்மாவின் அன்பு டீயோவைக் கட்டுப்படுத்துகிறது. எல்லா ஆண்களைப் போலவும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழும் அவன், தனது அம்மாவின் இறப்புக்கு பின்னரே தனது உடலும் உணர்வும் சார்ந்த மாறுபாடுகளுக்கு விடுதலை அளிக்கிறான். பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்து முடிவுகள் எடுக்கிறான். இதனையெல்லாம் செய்யும்பொழுது டீயோ ஒரு குடும்பத் தலைவன், வழக்கறிஞர், பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் என சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கிறான்.
பெண்ணாக மாற முயற்சிக்கும் டீயோ ஆணின் மேல் ஈர்ப்பு கொள்ளாமல் பெண்ணான அனாவையேத் தேடுகிறான். அவள் தன்னை புரிந்துகொள்வாள் என்றும் நம்புகிறான். அறுவை சிகிச்சைக்குப் பின் பல்கலைக்கழகத்திலும் பொது இடங்களிலும் டீயோவாக தனது அடையாள அட்டையை கொடுக்கும்போது எல்லோரும் பார்க்கும் பார்வையும் கேட்கும் கேள்விகளும் போதும் திருநங்கைகளைப் பற்றியும் LGBTயினர் பற்றியும் எல்லா நாடுகளிலும் ஒரே பார்வைதான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
உறக்கம் இல்லாமல் வெனிசுலாவின் சாலைகளில் சுற்றும்போது டீயோ பார்க்கும் காட்சிகளை நாமும் இங்கே சென்னையில் இரவுநேரங்களில் பல முறை பார்த்திருப்போம். இதற்கும் அதற்கும் பெரிதாய் வேறுபாடு இல்லை.
தனது பெயரை டமாராவாக மாற்ற எடுக்கும் முயற்சிகளும் அதற்கான எதிர்வினைகளும் டீயோ பெண்ணாக மாறியதை விட கடினமானதாக இருக்கிறது. சட்டமே உதவி செய்தாலும் மனிதர்கள் மறுத்து விடுகின்றனர். டமாராவும் ஒரு வழக்கறிஞர்தான்.
இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த டமாரா அட்ரியன் வெனிசுலாவில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் திருநங்கை உறுப்பினர் இவர்தான். முக்கிய LGBT செயற்பாட்டாளர். திருநங்கைகள் பலரும் டமாராவைப் போல வாழ முடிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கான போராட்டம் என்பது ரொம்பவே கடுமையானது என்பதைத்தான் 'டமாரா'வும் பேசுகிறது.
LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது அடையாளங்களை தங்கள் உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கு 'டமாரா' ஒரு உதாரணம். இத்தகைய அடையாளங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த இச்சமூகம் அனுமதிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இன்னும் எத்தனையோ டமாராக்கள் இந்தியாவில் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து கூவாகத்தின் கூத்தாண்டவர் திருவிழாவின் போது மட்டும் திருநங்கையாக மாறி மகிழ்கின்றனர்.
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் 'டமாரா' திரையிடப்பட்டது திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களும் கலந்துகொண்டு திரைப்படம் குறித்து கலந்துரையாடினர். டமாரா அட்ரியனும் திரைப்படக்குழுவினருடன் வந்திருந்தார்.
சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com