கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை.
லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் ரயா. அவளது பெற்றோர் எப்போதோ விவாகரத்து வாங்கிவிட்டனர். ரயாவின் அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ரயாவின் அப்பாவோ மரணம் அடைந்துவிடுகிறார். அதன்பிறகு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார் ரயாவின் தந்தை வழி பாட்டி.
ஒருநாள் எதிர்பாராதவிதமாக ரயாவின் பாட்டியும் இறந்துவிட, அதன்பின் ரயா என்ன முடிவெடுக்கிறாள்? வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே மெல்லோ மட்.
ஆப்பிள் மரங்களின் மீதான பாசத்தினாலேயே தனது பாட்டியுடன் தங்கியிருக்கிறாள் ரயா. அந்த ஆப்பிள் மரங்களையும் அவர்களது வீட்டையும் விற்று விட பாட்டி முடிவெடுக்கும்போது, அதனை எதிர்த்து ரயாவால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. பாட்டி இறந்தபின் அவர் இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் தனது வாழ்வைத் தானே பார்த்துக்கொள்ளும் முடிவை எடுக்கிறாள்.
பாட்டி இறந்ததை வெளியே சொன்னால் ரயாவும் அவளது தம்பியும் குழந்தைகள் காப்பகத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். ஐரோப்பாவின் பல நாடுகளில் இதுதான் சட்டம். ஆனால் ரயாவிற்கு ஒருபோதும் குழந்தைகள் காப்பகம் மீது விருப்பம் இல்லை. தன்னுடைய வாழ்வை சுதந்திரமாக வாழ ஆசைப்படும் ரயா, தனக்கான முடிவை எடுக்கிறாள். சில சமயங்களில் அது சட்டங்களுக்கு புறம்பாகவும் இருக்கிறது.
அப்பா, அம்மா இருவராலும் கைவிடப்பட்டபின் ஒரு பெண் தனது வாழ்வை கடத்த எடுக்கும் முடிவுகள், அதுவும் பதின்பருவத்து பெண் எடுக்கும் முடிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை லடிவா நம்மிடையே சொல்கிறது.
படம் முழுக்க வசனங்களை விட காட்சிகளே அதிகம் பேசுகின்றன. ரயா தன்னை ஒரு பெரிய பெண்ணாக நினைத்து கொள்கிறாள். பல நேரங்களில் அவள் எடுக்கும் பதின்பருவத்து பிள்ளைகளை தாண்டியதாகவே இருக்கிறது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே அவளை அப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது.
படம் முடிந்தபின் ரயா உங்களை கண்டிப்பாக தொந்தரவு செய்வாள். அவளது நினைவுகள் கொஞ்ச நேரமேனும் உங்களுடன் இருக்கும். அதுதான் மெல்லோ மட் திரைப்படத்தின் முக்கியமான அம்சம். படம் நெடுக பிண்ணனி இசை என்பது இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு அருமையான பயணம் ரயாவுடன் நாம் செல்லலாம்.
காசில்லாமல் திருட முயலும்போதும் சரி, பாட்டி இறந்த பின் என்ன செய்வெதென்று தெரியாமல் ஒரு செயலைச் செய்யும்போதும் சரி, ரயாவின் மீது வெறுப்பு ஏற்படுவதே இல்லை. உண்மையில் ரயாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என எண்ணிக் கொண்டே இருக்கிறோம்.
படத்தின் இறுதியில் ரயா தன் தம்பிக்கு செருப்பு வாங்கித் தரும் காட்சி, ரயாவினை இன்னும் நேசிக்க வைக்கிறது. ரயாவின் பயணம் எவ்வளவு கடினமானது என்பதை அவளது அந்த மென்சிரிப்பு சொல்கிறது. படம் நெடுக எதோ உணர்வுகளுடன் பயணிக்கும் சக பயணிபோல நாம் மாறி விடுகிறோம். பெற்றோர் இல்லாமல் தனித்து வாழ நேரும் பதின்பருவத்து குழந்தைகள் பலரது கதைகளாகவே இருக்கிறது மெல்லோ மட்.
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com