உலக சினிமா

கோவா IFFI 2016- லந்தூரி: ஆசிட் வீச்சின் இரு பக்கங்கள்

சா.ஜெ.முகில் தங்கம்

கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை

Lantouri | Reza Dormishan | Iran

பெண்களை பின் தொடர்தலும் பெண்கள் மீதான வன்முறையும் இன்றைய நிலையில் அதிகமாகவே நடக்கிறது. காதலிக்கும் பெண்களை பின் தொடர்வதும் காதலை ஏற்றுக்கொள்ள அவர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதுமான காட்சிகள் நாம் தமிழ்த் திரையில் அதிகமாகவே இருக்கின்றன. அந்தக் காட்சிகள் அனைத்தும் அத்தகைய செயலை ஊக்குவிக்கும் விதமாகவே சித்தரிக்கப்படுகின்றன.

அதனால்தான் என்னவோ தங்களது காதலை ஏற்க மறுப்பவர்களை ஆசிட் வீச்சுக்கு உள்ளாவதையும் சமூகம் கண்டுகொள்ளாமல் அந்த சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறை, ஒரு பார்வையில் இருந்தே பார்க்கப்படுகிறது. அதாவது ஆணின் பார்வையில் அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையில் இருந்து மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இரானியத் திரைப்படமான 'லந்தூரி'யானது அதன் இரு பக்கங்களையும் நமக்கு காட்டுகிறது.

தனது நண்பர் குழுவுடன் சின்ன சின்ன திருட்டுகளைச் செய்து வாழ்ந்து வரும் பஷாவிற்கு பத்திரிக்கையாளரான மரியம் மீது காதல் வருகிறது. பொருளாதார நிலையிலும் சரி சமூக நிலையும் சரி உயர்ந்த குடும்பத்தினைச் சேர்ந்தவர் மரியம். தனது தொழிலை மட்டுமே நேசிக்கும் மரியம், இரான் நாட்டில் செயல்முறையில் இருக்கும் பழிக்குப்பழி எனும் தண்டனை முறைக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். சில சந்திப்புகளுக்குப் பின் பஷா, மரியாவின் முகத்தில் ஆசிட் வீசுகிறான். பழிக்குப்பழி தண்டனையே வேண்டாம் என சொன்ன மரியம் பஷாவை மன்னித்தாரா? என்பதை 'லந்தூரி'யில் காட்டியுள்ளார் ரெஸா டொர்மிஷன் (Reza Dormishan).

படத்தின் ஆரம்பத்தில் பஷாவைப் பற்றி ஆவணப்படப் பாணியில் பலரும் பேசுகின்றனர். பஷா வளர்ந்த விதம், பஷா போன்றோர் திருடர்களாக மாறக் காரணம் எது? உண்மையில் பஷாவின் குணம் என்ன? என அவனைச் சுற்றிய விஷயங்களையே அனைவரும் பேசுகின்றனர்.

அதன்பின் மரியம் பற்றிய அறிமுகமாக அதேபோல பலரும் பேசுகின்றனர். பஷாவின் பார்வையில் இருந்து பஷா-மரியம் உறவைக் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர். இப்படிப் பலரும் ஆவணப்பட பாணியில் பேசிக் கொண்டே இருக்கின்றனர். இதில் பேசுபவர்கள் பலரும் இந்தக் கதையில் வரும் மாந்தர்களாக இருக்கிறார்கள்.

கதையின் வெளியில் இருந்து பேசக்கூடியவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். திரைப்படமானது ஏறக்குறைய ஆவணப்படம் போலவேதான் இருக்கிறது. என்னவெல்லாம் பேசுகிறார்களோ அவற்றைக் காட்சிகளில் அழுத்தமாகவே காட்டுகிறார் இயக்குநர். ஆரம்பத்தில் பஷா மரியம் குறித்து நமக்குள் ஏற்படும் பார்வை ஆசிட் வீச்சுக்குப் பின் மரியம் பேச ஆரம்பிக்கும்போது முற்றிலும் மாறுகிறது. இறுதிக் காட்சியில் மரியத்தின் முடிவும் நம்மை கொஞ்சம் யோசிக்கவே வைக்கிறது.

'லந்தூரி'யானது இரானின் சமூகச் சிக்கல்களை பேசுபொருளாக்குகிறது. ஆனால் அவை இரானின் சமூக சிக்கல்கள் மட்டுமல்ல இந்தியாவிற்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான். பஷாவின் பார்வையில் இருந்து மரியத்துடனான உறவுநிலை சொல்லப்படும்போது இருவரும் காதலிக்கவே செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும். ஆனால், இதற்கு மரியத்தின் பதில்கள் வரும்போதுதான் நமது முட்டாள்தனம் நமக்கு உரைக்கிறது. அதே நேரத்தில் சமூக அடுக்குகளில் பஷாவைப் போன்றோர் உருவாகக் காரணம் என்ன? என்பதையும் யோசிக்க வைக்கிறது ஆவணப்பட பாணியிலான பேச்சுகள்.

சமூக அடுக்கில் பஷாவும் அவரது நண்பர்களைப் போன்றவர்களும் ஏன் உருவாகிறார்கள் என்பதையும் பெண்கள் மீதான வன்முறையையும் ஒருசேரப் பேசுகிறது 'லந்தூரி'. இரண்டுக்கும் நம்மிடையே தீர்வினைச் சொல்லாமல் நம்மை தீர்வை நோக்கி யோசிக்க வைக்கிறது 'லந்தூரி'யின் திரை அனுபவம். இன்னும் எத்தனை முறை காதல் என்ற பெயரில் பெண்கள் மீதான வன்முறை நிகழுமோ அத்தனை முறையும் 'லந்தூரி' நிச்சயம் நினைவுக்கு வரும்.

- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com

SCROLL FOR NEXT