உலக சினிமா

வேறு படத்தின் சாயல் இருந்தால் விருது கொடுப்பார்களா? - ‘செல்லோ ஷோ’ இயக்குநர் கேள்வி

செய்திப்பிரிவு

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம், ‘செல்லோ ஷோ’. பான் நலின் இயக்கியுள்ள இந்த குஜராத்தி படத்தில் பவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, திபன் ராவல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 14-ம் தேதி வெளியாக உள்ள இந்தத் திரைப்படம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வருகிறது. சென்னையிலும் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.

திரையிடலுக்குப் பின் இயக்குநர் பான் நலின் கூறியதாவது: இந்தப் படம் என் குழந்தைப் பருவ அனுபவத்தை வைத்து உருவாக்கப்பட்டது. எனக்கு 8 வயது இருக்கும் போது முதன் முதலாக ஒரு திரைப்படம் பார்த்தேன். அப்போதிருந்தே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. அது மொத்தமாக என்னை இழுத்துக்கொண்டது. பிறகு நாங்கள் விளையாட்டாக தீப்பெட்டி, கலர் கண்ணாடிகளை வைத்து வீட்டில் படங்களைத் திரையிட்டுப் பார்த்தோம். அந்த அனுபவத்தை வைத்துதான் இதை இயக்கி இருக்கிறேன். கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு திரைப்பட ஃபிலிம் மறைந்து, டிஜிட்டல் யுகம் வந்துவிட்டது. அந்த நேரத்தில், இந்திய சினிமா பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் இந்தப் படத்தை உருவாக்கினேன். இந்திய சினிமாவுக்கு நான் கொடுத்துள்ள உணர்வுபூர்வமான காணிக்கையாக இதைப் பார்க்கிறேன்’’ என்றார்.

அப்போது தயாரிப்பாளர் தீன் மோமையா உடன் இருந்தார். இது ‘சினிமா பாரடைசோ’ என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று எழுந்துள்ள விமர்சனம் குறித்து மும்பையில் பதிலளித்த பான் நலின், அந்தப் புகாரை மறுத்துள்ளார். “தகவல் தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறும் முன், திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். இது பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. வேறுபடத்தின் சாயல் இருந்தால் விருது கொடுப்பார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT