தெற்கு மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிந்து ஆடு, மாடு, ஒட்டகங்களை மேய்த்து கூடாரம் அமைத்து வாழும் பழங்குடியினர்களைப் பற்றிய திரைப்படம்தான் 'தி ஸ்டோரி ஆப் வீப்பிங் கேமல்'. (The story of weeping camel)
மக்கள் வாழ்வதற்கு கோபி பாலைவனம் ஏற்ற இடமில்லை. ஆனால் அங்கேயும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. மற்ற மனிதர்களைவிட பாலைவனத்தில் இயற்கையைப் போற்றும் மனிதர்களும், அம்மனிதர்களிடம் கூடிவாழும் பான்மையும் இருக்கிறது என்பதை இத்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
அத்தகைய ஒரு பாலைவனப் பிரதேசத்தில் ஒட்டகங்கள் நின்று தூரமாக பார்த்துக் கொண்டிருப்பதற்குக் கூட ஒரு கதை உண்டு. ஒரு மான், திருவிழாவுக்கு போகிறேன். கொம்பு இல்லாமல் போனால் நன்றாக இருக்காது எனக் ஒட்டகத்திடம் கொம்பை கடனாகக் கேட்டதாம். ஒரு ஒட்டகம் தன்னுடைய கொம்புகளை கொடுத்ததாம். பின்னர் அது திருப்பித் தரப்படவேயில்லையாம், வாங்கிச் சென்றதைத் திருப்பித்தருவதற்கு கொம்போடு யாராவது வருவார்கள் என்றுதான் ஒட்டகங்கள் நின்ற வண்ணம் எப்போதும் வெகுதூரம் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன. இப்படி ஒட்டகங்கள் வெகுதூரத்தை நோக்கி வெறித்துப் பார்ப்பதை படமுழுக்க பார்க்கமுடிகிறது.
ஒட்டகங்கள் பிரசவிக்கும் காலங்களில் குடும்பமே 'பிரசவம் நன்றாக அமையவேண்டும்' என்பதற்காக சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஒட்டகத்தின் முகத்தில் ஒரு மூக்கணாங்கயிற்றை இழுத்துக் கட்டுகிறார்கள். அந்த ஒட்டகமோ சிரமமான பிரசவத்தால் சிக்கியிருப்பவள். அவளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து அவளுடைய கர்ப்பப் பையிலிருந்து குட்டி ஒட்டகம் வெளியே வர உதவுகிறார்கள்.
தலையும் கால்களும் ஒரே நேரத்தில் முன்வந்தபடி சற்றும் எதிர்பாராதவாறு வெள்ளை ஒட்டகக் குட்டி பிறப்பதை பார்த்த மாத்திரத்திலேயே அதை வெறுக்கிறது தாய் ஒட்டகம். அக்குட்டியை தாய் ஒட்டகம் தள்ளி வைக்கிறது. இவ்விஷயம் அங்குள்ளவர்களுக்கு மிகப்பெரிய சோகமாகிறது.
அவர்கள் தாய் ஒட்டகத்திற்கு தெரியாமல் பால் கறந்து கொண்டுவந்து குட்டி ஒட்டகத்திற்கு ஊட்டுகிறார்கள். தொடர்ந்து இதுவே நடக்கிறது. குட்டி ஒட்டகம் பிறந்த நாளிலிருந்து அது பால்குடிக்க வந்தால் தாய் ஒட்டகம் அதை காலால் தள்ளும் சோகமும் நம்மை வாட்டுகிறது.
அதனால் ஒட்டகத்தின் பின்னங்கால்களைக் கட்டி, கன்றுக் குட்டியை பால்குடிக்க அழைக்கிறார்கள். ஒருமுறை அனுமதித்த தாய் ஒட்டகம் அடுத்தடுத்து பால் குடிக்க விடாமல் அலைக்கழிக்கிறது. அதுமட்டுமின்றி தன் வெள்ளைக் கன்றை தன்னோடு இருக்க விடாமல் கண்காணித்தவாறு இருக்கிறது. இப்படி அலைக்கழிக்கப்படும் ஒட்டகக் கன்றை தாய் ஏற்றுக்கொள்வது இங்கு பலமுறை நடந்திருக்கிறது. அதற்காக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் வழி ஒன்று உண்டு என்று அங்குள்ள பெரியவர்கள் கூற, அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்.
இந்தப் பாலைவனத்தில் வாழும் மக்களுக்கு பேரிடராக அச்சம்தரும் பாலைவனப் புயலும் இப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்தப் புயல் வருகையும் அவர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளுக்குப் பிறகான இயற்கை வழிபாடும் பாலைவன மக்கள் சமுதாயத்தின் அடியாழத்துக் குரலாக ஒலித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, அம்மக்களின் சக குடும்பங்கள் அங்கு வரும் மனிதர்களை நடத்தும் முறையும் உபசரிக்கும் பாங்கும் கூடாரத்திற்குள்ளிருக்கும் எளிய வாழ்க்கையும் மிக மிக சிறப்பானது. இவற்றைக் காணும் பார்வையாளனுக்கும் காட்சிக் களன்களுக்கும் இடையில் எந்த உறுத்தலையும் தந்துவிடாத ஒளிப்பதிவைப் பற்றியும் சொல்லவேண்டும்.
மெல்லிய கண்ணாடிக் காகிதச் சுவர் போன்ற மிக நுண்ணிய இடைவெளியைக் கூட உணர்த்தாத மங்கோலிய கோபி புல்வெளி வாழ்வின் நெருக்கத்தை ஒளிப்பதிவு அளித்துள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குநரான செல்வி தாவா பியம்பசுரனின் உதவியாளர் லூய்கி பலோர்னி என்பவரே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
குடும்பத்தின் மூத்தவர்கள் சொல்லும் வழிமுறைகளை உடனே நிறைவேற்றும்முகமாக, துடிப்போடு செல்கின்றனர் அக்குடும்பத்தின் சிறுவர்கள்.
உக்னா எனும் சிறுவன், அங்கு வந்திருக்கும் வேறொரு ஒட்டகத்தைத் தட்டி தரையில் அமரவைத்து அதன் மீதேறி தன் அண்ணன் டியூடோவையும் (என்க்புல்கான் இக்பாயர்) அழைத்துக்கொண்டு நகருக்கு செல்கிறான். அங்குள்ள பள்ளியில் இசையாசிரியரை அழைத்துக்கொண்டு வருகிறான். தாய் ஒட்டகத்தோடு குட்டி ஒட்டகத்தை சேர்த்து வைப்பதில் தன் பங்கையாற்றும் இப்படத்தின் முக்கியப் பாத்திரமான உக்னாவாக நடித்துள்ள துடிப்புமிக்க பத்து வயதுச் சிறுவன் உகான் பட்டர் இக்பாயரின் இயல்பாக வெளிப்படுத்தத் தகுந்த நடிப்பாற்றலின் பாங்கு அபரிதமானது.
தாய் ஒட்டகம் தன்னை தள்ளிவைத்துவிட்ட பிறகு அது படும் அவஸ்தையை எந்த வித வசனமுமின்றி அதன் சோகத்தை வெளிப்படுத்தும் ஒருவித ராகத்தை திரைக்குப் பின்னிருந்து இசைக்கப்படுகிறது. பாலைவனக் காற்றோசையோடு இந்த இசையை தவழவிட்ட இசை இயக்குனர்கள் மங்க்-எர்டேன் குலூன்பாட் மற்றும் பாட்சோரிங் வான்சிங் ஆகியோரின் ஆத்மராகம் நம் மனதோடு பேசுகிறது.
சிறுவர்களின் அழைப்புக்கிணங்க இக்குடும்பத்தைத் தேடிவந்து தன் பெரிய வயலின் கருவியைக் கொண்டு அற்புதமான இசையோசையை இழைத்துக்கொடுக்கிறார் இசையாசிரியர். தாய் ஒட்டகத்தை தன் குட்டியோடு சேர்த்து வைப்பவராக வரும் அந்த வயலின் ஆசிரியர் மங்க்பாயர் வாக்வாவின் வருகை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. அவர் வயலின் வாசிக்கிறார். அவரும் வெளிப்படையான பொருள் எதுவுமின்றி உள்ளத்தைப் புரட்டிப்போட்டு, கெட்டித்த மனங்களையும் கரைத்துப் போடும் ராகத்தை மட்டுமே ஹம்மிங்காக பாடும் சிறுவனின் இளம்தாயாக வருபவரும் தங்களது மேன்மையான நடிப்பினால் திரைப்படத்தை இன்னும் ஒரு உயரத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.
பாலைவன விலங்குகளின் தாய் சேய் உறவுகளைப் பேச முற்பட்டுள்ளது இப்படம். தாவா பியம்பசுரன் எனும் இளம்பெண் இயக்கத்தில் உருவானதால் தானோ என்னவோ நாடோடியாக மேய்ப்பவர்களின் நாட்டுப்புற கரடுமுரடான வாழ்வில் உள்ள அற்புதமான மனிதர்களை உயிரின் மலர்ச்சியாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஆர்ப்பாட்ட கோண(ல்)க் காட்சிகள் எதையும் காட்டாமல் எந்தவித உறுத்தலுக்கும் இடமின்றி பார்வையாளனை திரைக்குள்ளிருக்கும் பரந்துவிரிந்த பாலைவனத்திற்குள் இழுத்துப்போடுகிறது. ஈர்ப்புத் தன்மைமிக்க ஒரு டாக்குமெண்டரிக்குண்டான பொறுத்தப்பாட்டோடு படம் இயங்குகிறது.
ராபர்ட் பிளாஹர்டி எனும் திரைப்பட மேதை 1922ல் திரைப்படம் சார்ந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் எஸ்கிமோக்களின் வட துருவத்தின் ஆர்க்ட்டிக் பிரதேசத்தின் வாழ்வியலை படமாக்கிய 'நானுக் ஆப் த நார்க்' எனும் ஆவணக் கதைப் படத்தோடு பொறுத்திப் பார்க்கலாம். அந்த முயற்சியின் தொடர்ச்சி என்ற அளவில் அதற்கு இணையான இடத்தில் உள்ள திரைப்படம் இது. அவ்விதமாகவே சிறந்த டாக்குமெண்டரிக்குண்டான ஆஸ்கருக்கு திஸ்டோரி ஆப் வீப்பிங் கேமலும் 2004ல் சர்வதேச திரைப்படக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது.
வயலின் இசைக்கும் ஒரு பெண்ணின் சோக ராகத்திற்கும் கரைந்துருகி இறுக்கமான தன் இதயத்தைத் திறந்து கண்ணீர்விடும் ஒட்டகம் இறுதியில் புறக்கணித்த தன் குட்டியை சேர்த்துக்கொளகிறது. விலங்குகளோடு மனிதன் கூடிவாழும் இயற்கையோடு இயைந்து வாழ்க்கையைப் பேசியுள்ளது இத்திரைப்படம்.
மனிதன் இயற்கையைப் போற்றவும் உறவுகளை மேம்படுத்தவும் வேண்டுமென்ற உன்னத நோக்கத்தையும் கொண்டுள்ளதால் உலகத் திரைப்படவிழாக்களில் பல பரிசுகளையும்வென்றுள்ளது இப்படம்.