உலக சினிமா

24-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம்: ‘ஸ்பெக்டர்’ ஷூட்டிங் காட்சிகள் வெளியீடு

செய்திப்பிரிவு

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் 24-வது திரைப்படமான ‘ஸ்பெக்டர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதன் ஷூட்டிங் காட்சி (வீடியோ) முதன்முறையாக வெளியாகி உள்ளது.

சோனி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தத் திரைப்படத்தில் ‘ஏஜென்ட் 007’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் டேனியல் கிரெய்க் நடிக்கிறார். பிரான்ஸ் நடிகை லியா சேடூக்ஸ் (மெடலீன் ஸ்வான்) மற்றும் நடிகர் தவே பாடிஸ்டா (மிஸ்டர் ஹிங்ஸ்) உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.

வீடியோ காட்சியில், ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளின் பின்னணியில், சன் கிளாஸ் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கிறார் டேனியல். இந்தத் திரைப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிலிருந்து சில காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் டேனியல் தேம்ஸ் நதியில் படகில் பயணிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதுதவிர ரோம், மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட இடங்களிலும் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2012-ல் டேனியல் நடிப்பில் வெளியான ஸ்கைஃபால் திரைப்படம், பிரிட்டனில் அதிக வசூலை (ரூ.1,029 கோடி) அள்ளி சாதனை படைத்தது. இந்த சாதனையை ஸ்பெக்டர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT