சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
வட்டங்கள் (Circles)
செர்பியத் திரைப்படம். ஒரு சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு அது தொடர்பானவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது, அலைக்கழிக்கிறது என்பது பற்றிய திரைப்படம். மத ரீதியான காழ்ப்புகளும் அதனூடாக அத்துமீறும் வன்முறையும் எத்தனை தனிநபர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அற்புதமான திரைக்கதையின் மூலம் தனித்து நிற்கிறது இத்திரைப்படம்.
தொடக்கத்தில் நிகழும் ஒரு காட்சி கோர்வையின் பிளாஷ்பேக் எப்போது வரும் என்று பார்வையாளனை அல்லாட வைத்திருப்பது இத்திரைப்படத்தில்தான். குளத்தில் எறியப்படும் ஒரு கல் எத்தனை அதிர்வுகளையும் வட்டங்களையும் உருவாக்குகிறது என்கிற படிமம்தான் இத்திரைப்படத்தின் மையம்.
ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 90களில் போஸ்னியாவில் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயம். மார்க்கோ ஓர் இளம் செர்பிய ராணுவ வீரன். விடுமுறையில் திரும்பியிருக்கிறான்.
தன் வருங்கால மனைவியைச் சந்தித்துக் காதல் பொங்க உற்சாகமாக உரையாடுகிறான். பிறகு தன்னுடைய மருத்துவ நண்பனொருவனுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கிருக்கும் ஒரு இசுலாமியக் கடைக்காரரை செர்பிய ராணுவத்தினர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். ஓடிப் போய் அவர்களைத் தடுக்கிறான். அவர்கள் இவனைக் கடுமையாக முறைப்பதோடு காட்சி உறைகிறது.
12 வருடங்களுக்குப் பிறகு திரைக்கதை ஜெர்மனிக்கும் போஸ்னியாவிற்கும் இடையில் பயணிக்கிறது. மார்க்கோவால் காப்பாற்றப்பட்ட அந்த இசுலாமியக் கடைக்காரர், மார்க்கோவின் வருங்கால மனைவி, மார்க்கோவை தாக்கும் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர், மார்க்கோவின் தந்தை, இவர்களின் சமகால வாழ்வில் நிகழும் உணர்ச்சிகரமான சம்பவங்களோடு மீதமுள்ள திரைக்கதை பயணிக்கிறது.
முதலில் உறைந்து போன காட்சி, படத்தின் இறுதியில் தொடரும்போதுதான் அதுவரையிலான பல பூடகங்கள் தெளிவாகின்றன. அற்புதமான திரைக்கதையைக் கொண்ட இப்படைத்தை இயக்கியவர் ஸ்டான் க்ளுபோவிக் (Srdan Golubovic). செர்பியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட திரைப்படம்.