உலக சினிமா

பிலவ்டு ஸ்கை: ஆழ்மன கிராமத்தின் கொள்ளை அழகு

பால்நிலவன்

நினைக்குந்தோறும் மணம்பரப்பும் காட்டு மலராக ஒரு படைப்பாக்கம் இருக்கமுடியுமென்றால் அது நிச்சயம் beloved sky எனும் ஈரானிய திரைப்படமாகத்தான் இருக்கும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துகொள்ளும் டெஹ்ரான் பல்கலைக்கழக இளம் மருத்துவப் பேராசிரியரின் கைக்குக் கிடைக்கும் பரிசோதனை முடிவிலிருந்துதான் படம் தொடங்குகிறது. அவருக்கு ப்ரைன் டியூமர் நோயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவருக்குக் கைக்குக் கிடைத்த அந்தக் காகிதங்களில்.

இதனால் மனநெருக்கடிக்கு ஆளாகிறார். காரை எடுத்துக்கொண்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே கிளம்புகிறார். நகரத்தைவிட்டு கார் மலையை நோக்கிச் செல்கிறது. மலைப் பாதைகளில் காரில் பயணிக்கும்போது, பக்கவாட்டில் வெகுதூரத்தில் மலையின் மடியில் தெரியும் கிராமத்தின் அழகை ரசிக்கிறார்.

அங்கிருந்து தொலைவே தெரியும் அக்காட்சியில், செம்மண் வண்ண ஓடுகள் வரிசைவரிசையாக, சாய்வுவாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் போன்ற தோற்றம். நடுவில் ஒரு மஞ்சள் அஞ்சல் அட்டையை கோபுரம்போல் மடக்கி கவிழ்த்ததுபோன்ற சிறு மண்டபம்.

சிறு கணத்தில் மலைமடியின் கிராம தூரக் காட்சியிலிருந்து மீண்டு அவரது பார்வை மீண்டும் மலைப்பாதையில் காரின் வேகத்தை கூட்டுகிறது. அதன்பிறகு வண்டி சென்றவேகம் சாதாரண வேகம் அல்ல. வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வேகத்துடன் தனது காரை கிளப்பிக்கொண்டு பாய்ந்துசெல்கிறார். உண்மையில் அவர் மலைக்கு அப்பால் போய் விழுந்திருக்க வேண்டும்.

சாதாரணமாக இத்தகைய மனநெருக்கடிக்கு ஆளான மனிதனை மையப்பாத்திரமாக அமைத்துக்கொண்டால் எல்லோரும் செய்வது என்ன? அடுத்தடுத்து நேரும் பல்வேறு துயரச் சூழல்களோ, வீட்டுப் பிரச்சனைகளோ, இவரது நிலையை புரிந்துகொள்ளாமல் நேரும் புறச்சூழல்களோ, பல்வேறு அவலங்களையோ அழுத்தமாக திரைக்கதைகள் அமைந்திருக்கும்.

அதிகம் போனால் அகிரா குரோசோவாவின் 'இகுரு'வை உந்துதலாய்க்கொண்டு எடுக்கப்பட்ட நீர்க்குமிழி போன்ற வகையறா படங்களில் வாழ்வின் நிலையாமை தத்துவங்களைச் சுற்றி நடக்கும் அன்றாடத்தின் பாடுகளை உள்ளடக்கி சித்தரிக்கத் தொடங்கிவிடுவோம். இப்படியே பல படங்கள் வந்துள்ளன.

ஆனால் இப்படத்தை இயக்கியவர் தாருஹ் மெஹ்ருஜி என்பதால் அத்தகைய அவசர முடிவு எதையும் இப்படத்தைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் நம்மால் வந்துவிடமுடியாது. 60களில் அவர் எடுத்த 'தி கவ்' திரைப்படத்தை உலகம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம்தான் இன்றைய ஈரானில் உருவாகிய புதிய அலை சினிமாவுக்கு முதல் கையெழுத்திட்டப் படம்.

2013ல் வந்திருக்கும் அதே இயக்குநரின் இத் திரைப்படம் நவீன ஆற்றலோடு சொல்லப்படும் பின்னல்கதை உத்திகளிலும் முன்னணியில் நிற்கிறது. மலைப்பாதையில் படுவேகமாக செல்லும் மருத்துவரின் கார் அப்பால் போய் விழும் வேகத்தில் பாய்ந்துசெல்கிறது. ஒரு பெண்மணி வந்து குறுக்கே நின்று காரை மறிக்கிறாள். மருத்துவர் வேறுவழியின்றி காரை நிறுத்துகிறார்.

சாலையோரம் அவரது கணவர் உடல்நலம் குன்றியிருப்பதைக் காட்டி கெஞ்சுகிறாள். காரை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று உடல்நலம் குன்றியிருக்கும் மனிதரைப் போய் பார்க்கிறார். அவர் மருத்துவர்தான் என்பதும் தெரியவரவே, அவரிடமே, ''ஊரின் தலைவர் இவர். இவரை நீங்கள்தான் சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும். தயவுசெய்து எங்கள் ஊருக்கு வாருங்கள்'' என அப்பெண்மணி இறைஞ்சுகிறாள்.

அப்பெண்மணியின் கணவரை ஏற்றிக்கொண்டு அவர்கள் ஊரைநோக்கி கார் திரும்புகிறது. அவர் சற்றுமுன் காரில் வந்தபோது பக்கவாட்டில் பார்த்த அதே கிராமத்தை பயணித்து நெருங்குகிறது. மலைமடியில் உள்ள கிராமத்திற்குச் அவர்களையும் ஏற்றி காரில் செல்கிறார். கிராமம் மண்வீடுகளையும் கல்வீடுகளையும் கொண்டு மிகவும் பழங்காலத்தன்மையுடன் அமைந்துள்ளது.

அந்தக் கிராமத்தில் அப்பெரியவருக்கு வேண்டிய சிகிச்சைகளை செய்கிறார். நல்லவேளையாக உடனே அவர் குணமாகிவிட மக்கள் இளம் மருத்துவரை அனைவரும் கொண்டாடுகிறார்கள். இளம் மருத்துவருக்கு சற்றே தலைவலித்திட ஓய்வெடுக்க ஓர் இடம் வேண்டுகிறார். மக்கள் அவரை ஒரு கட்டிடத்திற்கு அழைத்து வருகின்றனர்.

அங்கேயே தங்கவைக்க ஏற்பாடு செய்கின்றனர். பார்த்தால் அது ஒரு மருத்துவமனை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அத்தனை உபகரணங்களும் உள்ள மருத்துவமனை. அந்த இடத்தை தூய்மை செய்து அங்கே ஓய்வெடுக்கிறார். ஏற்கெனவே இங்கு தங்கி மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர் இறந்துவிட அதன்பிறகு மருத்துவமனை மூடப்பட்டுவிட்டது என்பதையும் அறிகிறார்.

மறுநாள் அவரை மக்கள் பழத் தட்டுகளோடு வந்து பார்க்கின்றனர். அவர்கள் அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று அங்கேயே தங்கி அந்த ஊர் மக்களுக்கு மருத்துவமும் செய்கிறார். எல்லோரும் அன்பாகப் பழகுகிறார்கள். ஏற்கெனவே இங்கிருந்த மருத்துவரும் இவரைப்போன்ற மிக மிக நல்லவர்தான் என்று மக்கள் கூறுகிறார். மக்கள் வந்து அடிக்கடி சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

ஒருநாள், தன் தாய்க்கு உடல்நலக்குறைவு என ஒரு குழந்தை வந்து அழைக்கிறது. அக்குழந்தையோ அவரது மகளைப் போலவே உள்ளது. அவரும் அக்குழந்தையின் வீட்டுக்குப் போகிறார். குழந்தையின் தாய் கணவனை இழந்தவர்.

குழந்தையின் தாய்க்கு சிகிச்சையளிக்க குழந்தையைப் பின்தொடர்ந்து அக்குழந்தையின் வீட்டுக்குச் செல்கிறார். அங்குள்ள குழந்தையின் தாயை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது. அது வேறு யாரும் இல்லை. அச்சு அசலாக இவரது மனைவிபோலவே இருக்கிறார். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருக்கு சிகிச்சை செய்கிறார்.

ஊர் மக்கள் கவலைக்கிடமான அந்தப் பெண்மணியைக் காண வீட்டில் திரண்டுள்ளனர். ஒரு நாட்டுவைத்தியரும் வருகிறார். காட்டில் உள்ள ஓர் அபூர்வ மலரின் பெயரைச் சொல்லி அது குகையில்தான் மலர்ந்திருக்கும் என்று இடத்தையும் கூறுகிறார். இளம் மருத்துவர் உடனே இவர் அப்பெண்மணிக்காக அவர் குறிப்பிட்ட இடம்தேடிச் செல்கிறார்.

ஆபத்துகள் நிறைந்த காட்டுக் குகைப் பகுதி அது. பலத்த முயற்சிக்குப் பிறகு வாசம் மிக்க அபூர்வ மலரை பறித்துவந்து குழந்தையின் தாயைக் குணப்படுத்த இவர் காரணமாகிறார். அந்த நாட்டுவைத்தியரையும் தேடிச் செல்கிறார் இந்த இளம் மருத்துவர். அங்கு பாரம்ரிய நாட்டுப்புற யுனானி மருத்துவத்தின் மகத்துவங்களை அதன் அதிசயங்களை அந்த வைத்தியர் விளக்குகிறார்.

இப்படியாக போகும் படத்தில் இன்னும் நாம் எதிர்பார்க்கமுடியாத எவ்வளவு வித்தியாசமான காட்சிகள். அந்தக் குழந்தையோடு இவர் காட்டுவெளியில் நடந்துசென்றவாக்கில் பேசிச்செல்லும் உலக அறிவு சார்ந்த செய்திகள் அருமை. மக்கள் ஒன்றுகூடி ஏற்கெனவே இறந்தபோன பழைய மருத்துவருக்காக மணிமண்டபம் கட்டிமுடிக்கிறார்கள்.

இறந்த அந்த மருத்துவர் முகம் இவருடைய முகமாகவே இருக்கும். மண்டபத்தைச் சுற்றி மக்கள் கூடி பாடி நினைவுகூர்கிறார்கள் என கிராமம் ஒரு சொர்க்கம்போல இவருக்குத் தோன்றுகிறது. விரைவில் டெஹ்ரானில் இருக்கும் மருத்துவரின் மனைவி அவருக்கு தொலைபேசி எங்கிருக்கிறீர்கள் என வினவ என்ன சொல்வதென்று தெரியாமல் விரைவில் வருகிறேன் என்கிறார்.

அதற்குள் குழந்தையின் தாயிடம் இவருக்கு ஈர்ப்பும் காதலும் மலர்கிறது. தன் மகளிடம் போனில் பேசுகிறார். ''உன்னைப்போலவே ஒரு மகளை இங்கு தினமும் சந்தித்துப் பேசி மகிழ்கிறேன்'' என்கிறார். ஒரு கட்டத்தில் எல்லாம் கனவோ என்று நமக்குத் தோன்றுகிறது. ஒரு வகையில் கனவுதான் அது.

உண்மையில் நடந்தது, மலைப்பாதையிலிருந்து கார் பாய்ந்துசென்று பாதைக்குவெளியே உருண்டுசென்று பள்ளத்தில் விழுந்துவிட்டது. இவர் விபத்தில் காயமுற்றதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தொடர்ந்து கோமா நிலையிலேயே இருக்கும் அவரது ஆழ்மனவெளியில் வழியில் வண்ணவண்ணச் சித்திரங்களாக சாலை மழைநீரில் விழுந்த பெட்ரோல் உருவாக்கும் வானவில்லின் வண்ணங்களைப்போல வழியில் கண்ட கிராமம் எழிலோவிய கிராமிய சித்தரிப்புகள் உயிர்பெற்றன.

உடல்நலம் முற்றிலும் குணமாகி காரை எடுத்துக்கொண்டு மலைப்பாதையின் அதே இடத்துக்கு வரும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவம் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி தொலைதூர கிராமத்தைப் பார்க்கிறார்.

செம்மண் வண்ண சாய்வுசாய்வான ஓட்டுவீடுகளும் ஒரு மஞ்சள் மண்டபமும் தெரியும். அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் இளம்பெண்ணை அழைத்து ''அது என்ன கிராமமா?'' என்று கேட்பார்.

''ஒருகாலத்துல அது கிராமமா இருந்துதுன்னு சொன்னாங்க. நாளடைவில அது மாறிப்போச்சி. ஒரு ஆளும் அங்கே இப்ப இல்ல சார்.''

''அந்த மண்டபம் என்னது அது?''

''அந்த ஊர்ல எல்லாருக்கும் நல்லா வைத்தியம் பார்த்த ஒரு தங்கமான டாக்டருக்காக மக்களா சேர்ந்து கட்டின மண்டபம் அது..''

''அந்த டாக்டரோட பெயர்?'' - அவரது இந்தக் கேள்விக்கு இவரது பெயரையே அவள் சொல்கிறாள்.

இவர் அதிர்ச்சியில் உறைந்திருக்க அந்தப் பெண் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறாள்...

''யாருமற்ற அந்த வனாந்தரத்தில் என்ன நடக்கிறது... எல்லாமும்'' என தமிழ் நவீனக் கவிஞர் நகுலனின் வரிகளுக்கு மிகச்சிறந்த விளக்கவுரையாகத் திகழ்கிறது இப்படம்.

கனவைப்போன்ற சம்பவங்கள், கண்ணுக்கினிய அழகியல், மனதுக்கினிய அற்புதங்கள் என ஓர் உயரிய படைப்பை இயக்குநர் திரையில் வரைந்துள்ளார்.

வாழ்வில் சில தருணங்களில் நம் அறிவுக்கு அப்பாலும் சில சாத்தியங்கள் உண்டு என நிறுவியிருக்கும் தாருஷ் மெஹ்ருஜ்ஜியின் 'பிலவ்டு ஸ்கை' அனுபவமிக்க படைப்பாற்றலுக்கு தக்க சான்றாக மிளிர்ந்து நிற்கிறது.

Beloved sky / Iran / Directed by Dariush Mehrjui / 2011

SCROLL FOR NEXT