ஜன.11 | ஐனாக்ஸ் 3 - இரவு 7.00 மணி | THE STUDENT | (M)UCHENIK | DIR: KRILL SEREBRENNIKOV | RUSSIA | 2016 | 118'
"கடவுளுக்கு நன்றி.. நான் ஒரு நாத்திகன்" - லூயிஸ் புனுவல்
அந்தக் கால 'சொர்க்க வாசல்' தமிழ்ப் படத்தில் ஆத்திகம் - நாத்திகம் குடுமிப்பிடிச் சண்டை பிரதானமாக இருக்கும். அதை நினைவுபடுத்துகிற மாதிரி 2016-ல் வந்திருக்கிற ரஷ்ய படம் 'த ஸ்டூடன்ட்'.
உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா...? இல்லை, கடவுள் முழுக்க முழுக்க மனிதனின் கற்பனையா? என்கிற தத்துவச் சண்டையை விளையாட்டாய் எடுத்துக்கொள்கிற நாம் கடவுளின் பெயரால் இப்பொழுதும் ரத்தம் சிதறி தெறிக்கும் தருணங்களில் பெரும் பதற்றம் அடைகிறோம். அப்படியொரு பதற்றத்தை இந்த படம் ஏற்படுத்துகிறது.
வென்யா - கடவுள் பக்தி முத்திப் போன மாணவன். எலினா - அவனுக்கு பயாலஜி பாடம் போதிக்கின்ற டீச்சர். பகுத்தறிவுவாதம் பேசுகிறவள். இவர்கள் இருவருக்குமிடையேயான ஆத்திக நாத்திகச் சண்டையை படம் விவரித்துச் செல்கிறது.
பழைய கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாத்திகம் போதிக்கப்பட்டது போய்... இப்போது புடின் ஆட்சியில் பள்ளிகளில் மதக்கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிற பின்புலத்தில் கதை நிகழ்கிறது.
ஸ்கூலில் சிலபஸ் பாடத்தோடு மதக் கல்வியும் பயில்கிற வென்யா. எந்நேரமும் பாக்கெட்டில் பைபிளை வைத்துக்கொன்டு திரிகிற அளவு வெறியன் ஆகிறான்.
பிகினியில் மாணவிகள் நீச்சல் பயிலக்கூடாது என்று பிரச்சினை செய்கிறான். செயின்ட் ஜானின் போதனைப்படி நவீனத் தொழில்மயமாதல் கடவுளுக்கு எதிரானது என்கிறான். "நீ உன் கணவனை பிரிந்ததற்குதான் கடவுள் உன்னை தண்டிக்கிறான்" என்று தன் தாயை தினம் அழ வைக்கிறான்.
அவன் அம்மாவுக்கு ஆற்றாமை, பையன் இப்படி கெட்டுப்போகிறானே.. மற்ற பையன்கள் மாதிரி அவன் நீலப்படங்கள் பார்த்தால்கூட அவளுக்கு பரவாயில்லை. "அவனுக்கு சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம்தான். சரி பண்ணிவிடலாம்" என்று நம்பிக்கை அளிக்கிறாள் எலினா.
பயாலஜி பாடம் நடத்தும்போது எலினா செக்ஸ் கல்வியையும் போதிக்க, வென்யா பிரச்சினை பண்ணுகிறான். "கல்யாணம் ஆனவர்கள்தான் செக்ஸைப்பற்றி பேசலாம். அப்படித்தான் பைபிளில் சொல்லியிருக்கிறது. என்போன்ற பள்ளி சிறுவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவையில்லை" என்று வென்யா தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான். ஸ்கூல் பிரின்சிபலும் அவனை ஆதரிக்கிறாள். "நாளை ஒரு மாணவன் ஒரு மாணவியை ப்ரெக்னன்ட் ஆக்கிவிடக்கூடாதுன்னு நான் பயப்படறேன். நீங்க இரண்டாயிரம் வருஷம் முன்னாடி எழுதின பைபிளுக்கு பயப்படறீங்க" என்கிறாள் எலினா.
டார்வினின் பரிணாம வளர்ச்சிப் பாட வகுப்பின் போது பிரச்சினை முற்றுகிறது. "டார்வினின் கோட்பாடே தப்பு. கடவுள் ஆறே நாளில் உலகத்தை படைத்தார். ஏழாவது நாள் ஓய்வெடுத்தார்" என்கிறான் வென்யா. "இல்லை. அவர் அந்த முழு வாரமும்தான் ரெஸ்ட் எடுத்தார்" என்று சண்டை போடுகிறாள் எலினா.
வென்யாவுக்கு மதவெறி என்றால், அவனை எப்படியாவது திருத்தி நார்மல் ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறி எலினாவுக்கு. இந்தப் போராட்டத்தில் "நீ என்னை மறந்தே விட்டாய்" என்று அவளைப் பிரிந்து போகிறான் அவள் பாய்ஃபிரன்ட். வென்யாவின் மதவெறி அதிகரிக்க அடுத்தடுத்து விபரீதங்கள் நிகழ்கின்றன.
விஞ்ஞானம் வெகுவாய் வளர்ந்துவிட்ட இச்சூழலில் முன்போல் மதவெறியும், அதன் விளைவாய் பேரழிவும் நிகழ வாய்ப்பில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது என்று எச்சரிக்கிறது இந்த படம். அபினுக்கும் கஞ்சாவுக்கும் இளைய தலைமுறை இன்று அடிமையாவது போல் மதவெறிக்கும் பலியாக முடியும். அந்த பயத்தை ஏற்படுத்துகிறது 'த ஸ்டூடன்ட்' திரைப்படம்.