உலக சினிமா

Every You Every Me: எரிதழல் உறவின் மிச்சம் | உலகத் திரை அலசல்

உமா சக்தி

நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் திடீரென்று உங்கள் பார்வையில் அந்நியராகத் தோன்றினால் என்ன செய்வீர்கள்? ஒரு தொழிற்சாலையில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஊழியரான நாதின் லிட்சர் (ஏன்னே ஸ்வார்ஸ்), கிட்டத்தட்ட தோற்றுப் போகும் நிலையிலுள்ள தனது திருமண வாழ்க்கையை அதன் கடைசி கட்டத்திலிருந்து மீட்டெடுத்து எப்படியாவது மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கிவிடப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இருமுனையில் அவள் சமர் செய்வது தன்னிடம் மட்டுமல்லாமல் தன் கணவன் பால் (கார்லோ லுபெக்) உடனும் தான். ஆனால் அவள் ஒருபோதும் கண்டடைய முடியாத இடத்துக்கு அந்தப் பழைய அவன் நழுவிச் செல்கிறான். தொடக்கத்தில் இனித்திருக்கும் எந்தவொரு உறவும் பின்னாட்களில் கசந்து, சலிப்பாகி, பிரிவுச் சுழலில் சிக்கிக் கொள்கிறது என்பதை ‘எவ்ரி யூ எவ்ரி மீ’ (Every You Every Me) திரைப்படம் விரிவாகச் சொல்கிறது. மைக்கேல் ஃபெட்டர் நாதன்ஸ்கி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் 74-வது பெர்லின் பனோரமாவில் திரையிடப்பட்டது.

படத்தின் முதல் காட்சியில், பூட்டிய அறைக்குள் கோபத்துடன் இருந்த ஒரு மாட்டைத் தொட்டு அதை தடவி, முத்தமிட்டு, மெல்லப் பேசி அதை சாந்தப்படுத்துகிறாள் நாதின். அதன் பின் அந்த அறையில் ஓரத்தில் பயத்துடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பேசியபடி அவனை வெளியே அழைத்துச் செல்கிறாள். மேலதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்கும்படியும் சொல்கிறாள். அந்தக் காளையும் சிறுவனும் வேறு யாருமல்ல. அவளின் பார்வையில் அது அவளது கணவன் பால்தான்.

புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வின் போது அதீத மன அழுத்தத்துக்குள்ளான பால், அங்கு பிரச்சினை ஏற்படுத்தி, அந்த அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் தன்னைப் பூட்டிக் கொள்கிறான். அவனை அங்கிருந்து வெளியேற்ற அவசரகதியில் நாதின் அழைக்கப்படுகிறாள். மிருக நிலையில் இருந்த அவனை அமைதிப்படுத்தி, அதன்பின் சிறுவன் மனநிலைக்கு மாறி இருந்த அவனைக் கொஞ்சி, அங்கிருந்து அழைத்துச் செல்கிறாள் நாதின். அதன்பிறகு, அலுவலக ஊழியர்களிடமும் நிறுவனரிடமும் தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்கும் அவன், உறுதியான நடுத்தர வயது மனிதனாகக் காணப்படுகிறான். அந்த நேர்காணலை இன்னொரு நாள் ஒத்திவைக்க வேண்டுகிறான்.

இப்படித்தான் பால் அவளுக்கு ஒரு சமயம் அடக்கமுடியாத காளையாகவும், இன்னொரு சமயம் சிறுவனாகவும், சில சமயம் வயதான மூதாட்டியாகவும், வெகு சில சமயத்தில் அவள் முதன்முதலில் சந்தித்த அழகான சுறுசுறுப்பான இளைஞனாகவும் அவள் உணர்வில் தோன்றுகிறான். சர்-ரியல் மற்றும் நான் லீனியர் முறையில் சொல்லப்பட்ட கதை என்பதால் பார்வையாளர்களுக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும், பின்னர் நாதினின் கண்களுக்கு பால் எத்தகையவனாக தென்படுகிறானோ அந்த உருவத்தைத் தான் திரையில் பார்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

பாலின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களை நாம் நாதினின் பார்வையிலிருந்து காண்கிறோம். இயக்குநர் நாதன்ஸ்கி பாலின் குணாதிசயங்களை திரையில் விளக்குவதில் மனிதன் - விலங்கு மற்றும் பாலினப் பிரிவைக் கூட நீக்கி மனிதனை ஓர் உயிரியாகக் காண்பிக்கிறார். பால் அவன் மனைவி நாதினின் உணர்வு நிலையில் எப்படித் தோன்றுவார் என்பதை அந்தந்த சூழலுக்கு ஏற்ப காட்சிப்படுத்துகிறார். பால் சிறுவனாக தோன்றும் ஒரு சமயத்தில் நாதின் அவனிடம் தங்கள் மகள்களின் பள்ளி நண்பர்கள் பாலைத் தங்கள் தந்தையாக வாடகைக்குத் தர முடியுமா என்று விரும்பிக் கேட்கும் அளவுக்கு அவனை நேசிக்கிறார்கள் என்று நாதின் சொல்லும்போது பால் பெருமையடைகிறான்.

இவ்வாறாக ஒரு சமயம் கட்டுப்படுத்தப்பட வேண்டிய பசுமாடு, மற்றொரு தருணம் உறுதியான பாதுகாவலன், இன்னொரு சமயம் முதிர்ந்த தாயைப் போன்ற உருவம் என வெவ்வேறு கோணங்களில் பால் அவள் கண்களுக்குத் தென்படுகிறான். வெகு அபூர்வமாக முதிர்ந்த தோற்றத்தில் பால் காணப்படுகையில், அந்த ஒரே தோளில்தான் தன் தலையைச் சாய்த்து நாதின் அமைதி காண முடிகிறது. இயக்குநர் சில சமயம் நம்மைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் போது மட்டுமே நிஜமான பாலைத் திரையில் காண்கிறோம்.

குடும்ப வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்கள், ஃப்ளாஷ்பேக்குகள் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் மூலம் கூறப்பட்ட கதை, நாதின் எனும் பெண் மீது காதலில் விழும் முப்பது வயது பால் எனும் இளைஞனின் கதையாக மாறுகிறது. அதன்பின் நாதினின் பார்வையில் தொடர்கிறது. பால் எனும் மனிதனின் அடையாளச் சிக்கல்களால் உருக்குலைந்து, இறுதியில் உண்மையான அவனைக் கண்டடைய முடியாமலும் சமரசம் செய்து வாழ இயலாமலும் தோல்வியடைவதாக முடிகிறது.

நாதின் தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்பவள். கொலோனுக்கு அருகிலுள்ள நிலக்கரி தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்கிறாள். தன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி வாழ்வாதாரத்துக்காக இன்னொரு ஊரில் வேலை செய்யும் நிர்பந்தங்களினால் அவள் எப்போதும் இறுக்கமாகவும் அதிகம் பேசாதவளாகவும் இருக்கிறாள். ஆனால், எந்தவொரு சூழலையும் தன் நிதானத்தாலும், அறிவுக் கூர்மையாலும் கையாளத் தெரிந்தவளாகவும் விரைவில் அறியப்படுகிறாள்.

அவளுடைய கூர் நோக்கும், வித்தியாசமான அணுகுமுறையும் அவளுடைய சக பணியாளரான அட்ஜாவை (சாரா பாசிலத்) அவள் பக்கம் ஈர்க்கின்றன. பால் அங்குதான் பணிபுரிந்தான். நாதினும் பாலும் ஆரம்பத்தில் சிறு சிறு மோதல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் படிப்படியாக அந்நிலை கடந்து காதல் எனும் மாயக்கரம் அவர்கள் வாழ்க்கையில் என்றென்றும் இருவரையும் பிணைக்கும் சிக்கலான உறவுக்கான ஒரு சாளரத்தைத் திறக்கிறது.

எல்லா காதலர்கள் போலவே சந்தோஷமாக இருந்த அவர்கள் திருமணம் புரிகிறார்கள். காலம் கரையக் கரைய அக்காதல் காலாவதியாகிறது. பல்வேறு சிக்கல்களால், மன நெருக்கடிகளால், நிகழ்காலத்தில் அவர்களது உறவு நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை. உறவு முறிவின் விளிம்பில் உள்ளது. நித்தம் வளர்ந்து வரும் பிரிவின் வலியில் நாதின் துயருற்று இருக்கிறாள்.

தன் கண் முன்னே கட்டுப்பாடு இழந்து தன் வாழ்க்கை தீர்ந்து போய்க் கொண்டிருப்பதன் காரணத்தை எவ்வளவு முயன்றும் தெரிந்து கொள்ள முடியாதவளாக தவிக்கிறாள். உணர்வெழுச்சியால் அதீதமாகக் கோபப்படும் குணம் கொண்ட பாலின் மன அழுத்தத்தால்தான் அவர்களது இல்லறத்தில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறதா என்றும் அவளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இதே பாலின் செய்கைகள் ஒரு காலத்தில் அவளுக்கு கவர்ச்சிகரமானதாகக் காணப்பட்டன.

ஆனால், இப்போது அவர்களது வாழ்க்கை நீர்த்துப் போனதால் அவள் சோபை இழந்திருக்கிறாள். ஓரிரவு குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு இருவரும் நீச்சல் குளத்துக்குச் செல்கிறார்கள். அங்கு பாலின் மார்பில் சாய்ந்தபடி நாதின் கேட்கிறாள், ஏன் முன்புபோல் உன்னை என்னால் காதலிக்க முடியவில்லை? அதற்கு அவன் நீ என்னை இன்னும் காதலிக்கிறாய் என்கிறான். நாதின் வெற்றுப் பார்வையுடன் யோசனையில் அமிழ்ந்து போய்விடுகிறாள்.

தனது சக ஊழியரும் தோழியுமான அட்ஜாவிடம் நாதின் கேட்கும் இன்னொரு கேள்வி தான் இப்படத்தின் மையக்குறியீடு. “யாரோ ஒரு அந்நியரின் சொல்லும் செயலும் விசித்திரமாக இருக்க, அதை உற்றுப் பார்க்கும் கணத்தில் அவர் வேறு யாருமல்ல உங்கள் சொந்த கணவர்தான் என்பதை உணரும் தருணம் எத்தகையதாக இருக்கும் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா?” என்கிறாள். இப்படித் தான் திருமண உறவில் நீண்ட காலம் இணைந்திருக்கும் இருவருக்கும் இடையிலான மெல்லிய நூலிழை அறுபட்டு அத்தொடர்பை இழப்பது என்பதன் உள்ளர்த்தம்.

திருமண உறவில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் எப்போதும் அந்த அன்பு நிபந்தனையின்றி இருக்க முடியுமா? தம்பதியர் ஒருவரை ஒருவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் நேசித்துவிட்டு தற்காலத்திலும் அதே நேசத்தை அப்படியே துளி மாறுதலின்றி தொடர முடியுமா? ஒரே போல் அன்பு செய்வதுதான் காதலின் முழுமையல்லவா? அவர்கள் வாழ்க்கை மிகப் பெரிய புதிர்க்கட்டத்தில் சிக்கி, அவர்களுக்கிடையே பிரிவு ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமி போல எப்படி உள்நுழைந்தது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாத நிலையில், அவர்களின் கடந்த கால நினைவுகள் பகுதி பகுதியாக படத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

வாழ்க்கை சுமுகமாக எவ்வித இருத்தலியல் பிரச்சினைகளும் இன்றி தொடர்ந்து செல்ல அடிப்படைத் தேவை பொருளாதாரம். அதன் அடிப்படையிலான நிதி ஸ்திரமின்மை தான் இப்படத்தின் பேசு பொருள். தவிர நாதினும் பாலும் ஒரே கூரையின் கீழ் இருந்தாலும், அவர்களிடையே ஊடுருவும் தனிமையைப் பற்றியதும் தான் இத்திரைப்படம்.

நாதினின் தொழிற்சாலையில் மறுசீரமைப்பு நடைபெற்று வருவதால், அவளுக்கு சம்பளம் குறைவாகவே கிடைக்கிறது. தவிர பணி நீக்கங்கள் பெரிய அளவில் உள்ளன, அச்சமயத்தில் பால் வேலையின்றி இருக்கிறான். புதிய வேலை தேட முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய குணக்கோளாறால் எளிதில் வேலையில் சேர முடியவில்லை. அவனின் சுபாவமும் கொந்தளிப்பு மனநிலையும் வீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவனை எப்போதும் பொறுத்தும், நிதானப்படுத்தியும், அரவணைத்தும் வந்த நாதின் இச்சூழலில் பலமிழக்கிறாள். தன் பிடியை நழுவ விடுகிறாள்.

“எவ்ரி யூ, எவ்ரி மீ” யதார்த்த வாழ்க்கையை வெகு இயல்பாகச் சித்தரிக்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் வலிகளை அதன் போக்கில் விளக்கி இணையர்களின் அக வாழ்க்கையை சமூக பொருளாதாரத்துடன் சேர்த்து அலசுகிறது. ஒரு உறவை அதன் ‘சிறந்த’ காலகட்டத்தை காண்பிப்பதுடன் அதில் ஏற்படும் சிக்கல்களையும் விளக்குகிறது.

அன்பில் இன்னும் நம்பிக்கையை இழக்காத கதாபாத்திரமாக பால் வெளிப்படுகையில், நாதின் அதை மறுப்பவளாகவும், தோற்றுப் போனவளாகவும் தென்படுகிறாள். இருவரின் அற்புதமான நடிப்பு அவர்களிடையே உள்ள முரண்பாடுகள், சிக்கல்கள் மற்றும் அன்பை பார்வையாளர்களுக்குப் புலனாக்குகிறது. ஆரம்பத்தில் நாதின் தான் தன் வாழ்க்கையில் மையம், எல்லாமும் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறாள், ஆனால், அவள் உண்மையில் அப்படி இருக்கிறாளா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் மற்றவர்களை நம்பியிருக்கிறாள், முக்கியமாக கணவன் பால். தனது தனித்துவம் நாளைடைவில் குடும்ப வாழ்க்கையில் சிதறுண்டு போவதைப் பார்த்து நாதின் செயலற்றுப் போகிறாள். நாதினின் சலனமற்ற, மனச்சோர்வடைந்த முகமும் அவளுடைய இலக்கற்ற பார்வையும் படம் நெடுகிலும் அன்பின் சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாள் என்பதை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் பாலை மீண்டும் பழைய மாதிரி நேசிக்க விரும்புகிறாள் ஆனால் அவளது சுயம் விழிக்க, ஒவ்வொரு முறையும் இரட்டை மனநிலைக்கு உள்ளாகிறாள். அவனைப் பிரிந்தால் தான் நிம்மதி என்ற மற்றொரு குரலுக்கு செவி சாய்க்கவும் அவளால் இயலவில்லை.

ஆணாதிக்க சமூகத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள தாயின் ஒரே மாதிரியான சாயலில் இருந்து நாதினை இப்படம் விலக்கிக் காண்பிக்கிறது. தனது கணவனுடன் சண்டையிட்டும், சமாதானம் அடைந்தும் வாழும் நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைச் சூழலில், அவனை விட்டுப் பிரிந்து செல்வதை விட, அவளுக்குள் அனைத்தையும் புதைத்து அவனுடனான மண உறவைத் தொடர்வதன் காரணம் சற்று மர்மமாக உள்ளது. தன்னை நீண்ட காலம் நேசிப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் ஒருத்தியுடன் பால் வாழ்ந்தாக வேண்டியுள்ள காரணங்களும் அதே போல் குழப்பமாகவே உள்ளன.

இருவரும் தங்கள் உறவில் தனிப்பட்ட காரணங்களுக்காக பாதிக்கப்பட்டுள்ளனர். திருமண வாழ்வில் வெளியில் பகிர முடியாத ரகசியங்கள், மன வலிகள் மற்றும் சிடுக்குகள் அனேகம் உள்ளன என்பதை இத்திரைப்படத்தில் உணர்த்துகிறார் இயக்குநர். பிரச்சினைகள், கவலைகள் மற்றும் அடக்கப்பட்ட ஆசைகள் ஆகியவற்றின் சிலந்தி வலையில் கணவன் மனைவி என இருவரும் சேர்ந்தே தான் சிக்கியுள்ளனர், இந்த மாயவலையிலிருந்து மீள்வதற்கான வழிகள் எதுவுமில்லை, அதற்குள் சுற்றிக் கொண்டிருப்பதைத் தவிர என்பதை இந்த சுவாரஸ்யமான, அதிநவீனக் கதை சொல்லும் முறையில் படமாக்கியுள்ளார் இயக்குநர்.

தவிர காதல் உறவின் வீழ்ச்சியையும், கனவுகளின் மீது யதார்த்தத்தின் வெற்றியையும் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கிறார் இயக்குனர். ஆனால் சில இடங்களில், அதன் நோக்கத்தை இழந்து, வெறும் கோட்பாட்டில் திரைக்கதை தடுமாறுகிறது. நாதினின் மனதிற்குள் நுழைந்து, பாலை அவள் நிராகரிக்க என்ன காரணம் உள்ளது என்று தேடினால், அவள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்பதை உணர முடிகிறது. அவள் பார்வையில் பால் வெவ்வேறு உடல் வடிவங்களில் இருந்தபோதிலும், இறுதியில் உண்மையான பாலின் இயல்பு என்ன என்பதும் விடை காண முடியாத வினாவாகவே உள்ளது.

படம்: எவ்ரி மீ, எவ்ரி யூ
இயக்குநர் - மைக்கேல் ஃபெட்டர் நதன்ஸ்கி
நடிகர்கள் - ஏன்னே ஸ்வார்ஸ், கார்லோ லுபெக், யூனஸ் அப்பாஸ்
இசை - கிரேகர் கியன்பர்க், பென் வின்க்ளர் (Gregor Keienburg, Ben Winkler)
ஒளிப்பதிவாளர் - ஜான் மைன்ட்ஸ்
எடிட்டர் - ஆன்ட்ரியா மெர்டென்ஸ்

முந்தைய உலகத் திரைப் பார்வை > Anora: காதலின் துயரும், உடல் அரசியலும்

SCROLL FOR NEXT