தமிழில் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யபாரதி. தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் ‘கோட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்பிடிப்பில், தன்னை பலமுறை அவர் அவமானப்படுத்தியதாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.
நரேஷ் குப்பிலியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்திருந்த திவ்யபாரதி, “பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்பது நகைச்சுவைஅல்ல. அது பெண் வெறுப்பின் பிரதிபலிப்புதான். இதுபோல ஒரு முறை மட்டுமல்ல, படப்பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார்.
அவருடைய நடவடிக்கைகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் படத்தின் ஹீரோ (சுடிகாலி சுதீர் ) எதுவும் பேசாமல் இருந்தது ஏமாற்றத்தைத் தந்தது. பெண்களை அவமதிக்காத, மரியாதை குறையாத இடங்களில் மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், நடிகை திவ்யபாரதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்படங்களில் பணிபுரியும் எந்த பெண்ணாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய திவ்யபாரதியின் தைரியத்துக்குப் பாராட்டுகள். ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில், இந்தியத் திரைப்படத் துறை முழுவதும் பெண்களின் புகார்களைக் கேட்டு தீர்க்க ‘பெண்கள் குறைதீர்ப்புக் குழு’ அமைக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
திவ்ய பாரதியின் வழக்கை கவனத்தில் கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.