‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருந்தார்.
இப்படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாகக் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை நடிகர் விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் படத்துக்காகக் கடந்த 10 மாதங்களாகத் தீவிரமாகத் தயாராகி வந்தேன். சமீபத்தில் படத்தின் இயக்குநருடன் படைப்பு ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டது.
தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சினையும் ஒன்று. இந்தப் படத்தைச் சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
எவ்வளவு முயற்சி செய்தும் இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள், அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும். தற்போது, எனது கவனம் எனது அடுத்த வெளியீடான ‘இரண்டு வானம்’ படம் மீதும், எனது சகோதரரின் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் மீதும் உள்ளது.
அதே நேரத்தில், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.