சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. ஆக.14-ல் வெளியான இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் வரவேற்பைப் பெற்று வருவதை அடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் சுனில் ரெட்டி, ராதிகா சரத்குமார், பவானி , மமிதா பைஜூ, இயக்குநர் வெங்கி அட்லூரி கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’ படத்தில் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு அவருடன் ‘லக்கி பாஸ்கரி’ல் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 3 வது முறையாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் இணைந்தேன். 3 படங்களும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல் - தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம். இந்தப்படம் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது.
சூர்யா அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார்.
இந்தப் படத்துக்காக, இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் 2 பாடல்களை உருவாக்கினோம். அந்தப் பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும்’’ என்றார்.