யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘வவ்வல்ஸ்; அன் அட்லஸ் ஆஃப் லவ்’.
5 கதைகளைக் கொண்ட இப்படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 13-ல் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் யூகி சேது பேசும்போது, “மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன்” என்றார். படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் ஹரி உத்ரா கூறும்போது, “அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே இப்போது அதிகம் வருகின்றன. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்கும் இயக்குநர்கள் இன்று குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாகச் செய்திருக்கிறார்கள்” என்றார்.