கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்சினைகளால் சேர்ந்து பணியாற்ற இயலவில்லை. இயக்குநர் அருண்ராஜா காமராஜின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமையட்டும் என்று இருவரும் சேர்ந்து பணியாற்றவிருந்த படத்தை கைவிடுவதாக நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க இருந்த படத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தன. இந்தநிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், ’இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த 10 மாதங்களாக படத்துக்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இந்தப் படத்தினை தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடு மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டது.
இந்த படத்தை சாத்தியமாக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். எவ்வளவு முயற்சி செய்தும் இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவாக அமையவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தில் இருந்து இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள், நடைமுறைகள் அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும்.
தற்போது என் கவனம் எனது அடுத்த வெளியீடான ‘இரண்டு வானம்’ படம் மீதும், எனது சகோதரரின் ‘Yellow Yellow Dirty Fellow’ படத்தின் மீதும்தான் உள்ளது.
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களிலும் அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.