ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘மகாராஜா’ படத்தில் ஒரு சின்ன வேடம் வாங்கி கொடுத்தால் சம்பளம் இல்லாமல் ஒரு படம் நடிக்கிறேன் என தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்திடம் கூறியதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பத்தா’. இந்தப் படத்தின் இசை வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.18) நடந்தது. இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதியிடம், அவர் நடித்த ‘மகாராஜா’ படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவிருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ‘‘மகாராஜா பத்தி பேசணும்னா நான் நித்திலன் பற்றிதான் சொல்லணும் அவர் ஒரு சிறந்த இயக்குநர். அவரது எழுத்து திறமை அவ்வளவு அபாரமானது. நிறைய எழுதுவார். இப்போ ‘மகாராஜா 2’ கதையும் சொன்னார். அவ்வளவு அழகாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றியது அவ்வளவு நன்றாக இருந்தது.
ஆனால் ‘மகாராஜா’ இவ்வளவு தூரம் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. படம் நன்றாக இருந்தது. படம் வெளிவந்த பிறகும் இந்த அளவுக்குப் போகும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. என்னுடைய தயாரிப்பாளர் சுதனுக்கு நன்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவர் போன் பண்ணியிருந்தார். அப்போது படத்தை ஹாலிவுட்டுக்கு விற்றுவிட்டாதாக சொன்னார். நிஜமாவா சொல்கிறீர்கள், யார் வாங்கி இருக்கிறார்கள் என ஆச்சரியமாக கேட்டேன்.
யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டபோது, அவர் பெயரைச் (மேத்யூ மெக்கோனஹி) சொன்னார். உடனே நான் அந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் வாங்கிக் கொடுங்கள், அடுத்து நான் ஒரு படம் சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என அவரிடம் சொன்னேன்.
எனக்கும் ஹாலிவுட்டில் நடிக்க ஆசை இருக்கிறது. அது நடக்குமா எனத் தெரியாது. ஆனால், நான் நடித்த படம் ஹாலிவுட் போவதில் எனக்கு மகிழ்ச்சியே. அனைத்துப் பெருமையும் இயக்குநர் நித்திலனையே சேரும். நன்றி நித்திலன்... ஐ லவ் யூ’’ என்று தெரிவித்தார்.
விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 - இயக்குநர் அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ஒரு தந்தை - மகள் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.