தமிழ் சினிமா

கம்ருதீன், பார்வதிக்கு ‘ரெட் கார்டு’ - பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்!

டெக்ஸ்டர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பமாக, விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதற்காக கம்ருதீன் மற்றும் விஜே பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, போட்டியாளர்கள் ஒரு காருக்குள் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டும் என்ற போட்டி வைக்கப்பட்டது. இதில் ஒன்பது போட்டியாளர்கள் பங்கேற்றனர்

இதில் கம்ரூதீன், பார்வதி இருவரும் மற்றொரு போட்டியாளரான சாண்ட்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் தனிப்பட்ட முறையில் மாறி கடுமையான சொற்கள் பிரயோகிக்கப்பட்டன. இதனால் சாண்ட்ராவை காரில் இருந்து வெளியேற்ற கம்ருதீன், பார்வதி இருவரும் இணைந்து செயல்பட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கம்ரூதீன் காரின் கதவைத் திறக்க, பார்வதி சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக காலால் உதைத்து கீழே தள்ளினார். இதில் கீழே விழுந்த சாண்ட்ராவுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக பிக் பாஸ் குழுவினர் சாண்ட்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சாண்ட்ரா நடிக்கிறார் என்று பார்வதி கூறியது ரசிகர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

சமூக வலைதளங்களில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு எதிராக #RedCardVJPaaru என்ற ஹேஷ்டேக் வைரலானது. இன்றைய வார இறுதி எபிசோடில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். "போட்டி என்ற பெயரில் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று கண்டித்த அவர், பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை பலமுறை மீறியதற்காக இருவருக்கும் ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்த சீசனில் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டும், மைக் அணியாமல் பேசுவது மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது என பார்வதி மற்றும் கம்ருதீன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தனர்.

தற்போது அவர்களின் இந்த திடீர் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாகரிகமற்ற விளையாட்டுக்குச் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT