விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா, லைலா நடித்து 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், ‘உன்னை நினைத்து’. இதில் முதலில் நடித்தது விஜய். சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து சூர்யா நடித்தார்.
இந்நிலையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் விஜய், சமீபத்தில் மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் ‘ஜனநாயகன்’ தனது கடைசி படம் என்றார். இது வேதனையான விஷயம்.
இந்த நேரத்தில் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன. அவர் நடிப்பில்தான் ‘உன்னை நினைத்து’ படத்தை இயக்கினேன். முதலில் 2 பாடல் காட்சிகளை ஷூட் பண்ணினேன். மூணாறில் ‘என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா?’ பாடலை படமாக்கினேன்” என்று கூறி அப்பாடலை பகிர்ந்துள்ள விக்ரமன், ``இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் இந்தப் பாடல் வைரல் ஆனது.
அந்த பாடல் தொடர்பான பழைய வீடியோ கேசட் ஒன்று கிடைத்தது. மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்குப் பதிவு செய்கிறேன். சூர்யாவின் இப்போதைய வீடியோவுடன், இதை ஒப்பிட வேண்டாம். இருவருமே சிறந்த நடிகர்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.