மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கோஷம் எழுப்பிய ரசிகர்களை நடிகர் விஜய் கட்டுப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், தமிழகம் மற்றும் மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ, நடிகை பூஜா ஹெக்டே, பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள் என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது.
விழா மேடையில் விஜய் என்ட்ரி கொடுத்ததுமே, உற்சாகமடைந்த ரசிகர்கள் "டிவிகே... டிவிகே..." என முழக்கமிட்டு அரங்கை அதிரச் செய்தனர். அப்போது மேடையில் இருந்த விஜய், மிகவும் நிதானமாக ரசிகர்களை நோக்கி வேண்டாம் என்று சைகை காட்டினார். "அமைதியாக இருங்கள். இங்கு வேண்டாம்" என்று சைகை செய்த விஜய், இது ஒரு சினிமா விழா என்பதைக் குறிப்பிட்டதோடு, அரசியல் கோஷங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கோஷங்கள் எழுப்பக் கூடாது, கட்சி தொடர்பான ஆடைகள் அணியக் கூடாது, அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என்று மலேசிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.