கருணாஸ், வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம், ‘ரேவன்’. இதில் வாணி போஜன், அனுமோள், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்கி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சேதுராஜன் ராஜகோபால் மற்றும் ஆர்.வி.சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர். வே. வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் சார்பில் செல்ல முத்து குப்புசாமி தயாரிக்கும் இப்படம் பற்றி, வெற்றிவேல் சந்திரசேகர் கூறும்போது, ‘‘இது க்ரைம் த்ரில்லர் திரைப்படம். நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்துக்கான கதையை உருவாக்கி இருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இந்தத் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.
இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகப் பார்க்கும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. படத்துக்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கி, பயன்படுத்துகிறோம்” என்றார்.