விஎஃப்எக்ஸ் (VFX) என்பது கேமராவால் காண முடியாத ஒரு காட்சியை, கணினியில் உருவாக்கி திரையில் தோன்றச் செய்யும் ஒளிப்பதிவின் கலை.
நடுக்கடலில் ஒரு சிறுவன் புலியுடன் பயணிப்பது, திரவ உலோக மனிதன் உருவம் மாறுவது, ஒரு சின்னஞ்சிறிய ஈ, கதாநாயகனாக மாறுவது, ஒரு சாதாரண கட்டிடம் பிரம்மாண்டமான அரண்மனையாக விரிவடைவது—இவை அனைத்தும் விஎஃப்எக்ஸ் மூலம் சாத்தியமாகின்றன.
விஎஃப்எக்ஸ் என்பது படப்பிடிப்பு முடிந்த பிறகு கணினியில் செய்யப்படும் வேலை மட்டுமல்ல. சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சி திரைக்கதையிலேயே பிறக்கிறது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் எது உண்மை, எது பின்னர் உருவாக்கப்படும் காட்சி, இரண்டையும் எவ்வாறு ஒரே உலகமாகத் தோன்றச் செய்வது என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படம் இதற்கு சிறந்த உதாரணம். கடலில் பயணிக்கும் புலி உண்மையானதாகத் தோன்றினாலும், அதன் பெரும்பாலான காட்சிகள் கணினியில் உருவாக்கப்பட்டவை. புலி இல்லாத இடத்தை நோக்கி நடிகர் நடிக்க வேண்டும். அவரது பார்வை, உடல் மொழி, கேமராவின் கோணம், புலியின் இருப்பிடம்—எல்லாமே முன்கூட்டியே சரியாகத் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
நடிகரின் மீது விழும் கடல் நீரின் பிரதிபலிப்பு, புலியின் மீதும் இருக்க வேண்டும். சூரிய ஒளியின் திசை இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். படகில் புலி இருப்பதால் உருவாகும் நிழல், அசைவு, அதன் உடல் எடையால் ஏற்படும் தாக்கம் போன்றவை காட்சிக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. பார்வையாளருக்கு இவை தனித்தனியாகத் தெரியாது. அவர், புலி அங்கே இருக்கிறது என்று நம்புகிறார்.
அதே சவால், ஆனால் இன்னும் தீவிரமாக ‘ஈ’ திரைப்படத்தில் வருகிறது. இங்கே விஎஃப்எக்ஸ் ஓர் உயிரினத்தை மட்டும் உருவாக்கவில்லை; ஒரு கதாநாயகனை உருவாக்குகிறது. ஈ கோபப்பட வேண்டும், பயப்பட வேண்டும், காதலை வெளிப்படுத்த வேண்டும், திட்டமிட வேண்டும். நடிகர்கள் உண்மையான ஈயுடன் நடிக்கவில்லை. எனவே, ஈ எங்கே இருக்கிறது, எந்த உயரத்தில் இருக்கிறது, எந்தத் திசையில் பார்க்கிறது என்பவை படப்பிடிப்பிலேயே குறியிடப்பட வேண்டும்.
நடிகரின் பார்வை, உடல் இயக்கம், கேமராவின் பார்வை—அனைத்தும் பின்னர் உருவாகப்போகும் ஈயுடன் பொருந்த வேண்டும். அது மேசையில் அமர்ந்தால் அதன் நிழல் இருக்க வேண்டும்; பறந்தால் அதன் இயக்கம் இயல்பாக இருக்க வேண்டும்; அதன் மீது விழும் ஒளி அந்த இடத்தின் ஒளியுடன் பொருந்த வேண்டும். எனவே, விஎஃப்எக்ஸ் கதாபாத்திரம் கணினி உருவமாக மட்டுமல்லாமல், ஒரு நடிகரைப் போலவே கதைக்குள் வாழ வேண்டும்.
‘டெர்மினேட்டர் 2’ இன்னொரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. T-1000 என்ற திரவ உலோக மனிதனின் உருவமாற்றம் கதாபாத்திரத்தின் இயல்பாக மாறியது. தொழில்நுட்பம் புதிய கதைசொல்லலுக்கு வழி அமைத்தது.
விஎஃப்எக்ஸில் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, சிறிய இடத்தை மிகப்பெரிய உலகமாகவும் மாற்ற முடியும். ‘மகதீரா’ இதற்கான சிறந்த இந்திய உதாரணம். படப்பிடிப்புத் தளத்தில் கோட்டையின் ஒரு பகுதி மட்டுமே உண்மையாக இருக்கும். அதன் பின்னால் விரியும் கோட்டை, மலைகள், நகரங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள் போன்றவை பின்னர் உருவாக்கப்படும். இதுவே காட்சித் தள விரிவாக்கம்.
ஆனால் உண்மையான கட்டிடமும் டிஜிட்டல் உலகமும் ஒன்றாகத் தோன்ற வேண்டுமென்றால், ஒளி, கண்ணோட்டம், அளவு, தூரம், வளிமண்டல மங்கல், நிறம் ஆகியவை ஒன்றோடொன்று பொருந்த வேண்டும். ஒரு சிறிய சுவரின் பின்னால் ஒரு பேரரசை உருவாக்குவது விஎஃப்எக்ஸ் கலைஞரின் திறமை. அந்தப் பேரரசு உண்மையில் அங்கே இருந்தது என்று நம்ப வைப்பது ஒளிப்பதிவாளரின் திறமை.
‘எந்திரன்’ இந்த சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தியது. ஒரு மனிதனின் பல உருவங்கள் ஒரே காட்சியில் தோன்றுவது, ரோபோக்களின் கூட்டங்கள், ஒன்றோடொன்று இணையும் வடிவங்கள் போன்ற காட்சிகளில் கேமரா இயக்கம், ஒளி, இடம் ஆகியவை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒரே நடிகரைப் பலமுறை படமாக்கி பின்னர் ஒன்றிணைக்கும்போது, கேமரா ஒரே பாதையில் அதே இயக்கத்தை ஒளியமைப்பு மாறாமல் மீண்டும் உருவாக்க வேண்டும்.
விஎஃப்எக்ஸ் கலைஞர் உருவத்தை உருவாக்கலாம்; அந்த உருவம் எந்த உலகில் வாழ்கிறது என்பதை ஒளிப்பதிவுதான் தீர்மானிக்கிறது. இங்குதான் ‘க்ரீன் ஸ்க்ரீன்’ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் வருகிறது. ஒரு நடிகரை பின்னர் வேறொரு உலகில் வைக்க வேண்டியிருந்தால், அவருக்குப் பின்னால் பச்சைத் திரை அமைக்கப்படுகிறது. பின்னர் அந்தப் பச்சை நிறம் நீக்கப்பட்டு அதன் இடத்தில் புதிய பின்னணி சேர்க்கப்படுகிறது. ஆனால், பச்சைத் திரை இருப்பதே விஎஃப்எக்ஸ் காட்சியின் வெற்றி அல்ல. அதில் எவ்வாறு ஒளியமைக்கிறோம் என்பதுதே பிரதானம்.
பச்சைத் திரையில் ஒளி சமமாகப் பட வேண்டும். அதிகமான நிழல், சுருக்கம், ஒளிப் பிரதிபலிப்பு அல்லது நிற வேறுபாடு இருந்தால் பின்னர் பச்சை நிறத்தைத் தனியாகப் பிரிப்பது சிரமமாகும். பச்சைத் திரைக்கு நாம் தரும் ஒளியும் நடிகருக்குத் தரும் ஒளியும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது மிகவும் முக்கியமான ஒளிப்பதிவு நுணுக்கம்.
பச்சைத் திரையை சீரான வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டும். நடிகருக்குத் தேவையான ஒளி அவரது கதாபாத்திரம் வாழும் உலகத்தின் ஒளியாக இருக்க வேண்டும். உதாரணமாக, நடிகர் பின்னர் இருண்ட காட்டுக்குள் இருப்பதாகக் காட்டப்பட வேண்டுமானால், அவரை வெறும் பச்சைத் திரையின் வெளிச்சத்துக்கு ஏற்ப ஒளியூட்டிவிட்டு பின்னர் இருண்ட பின்னணியைச் சேர்த்தால் காட்சி செயற்கையாகத் தெரியும்.
பின்னணி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அந்த உலகத்தின் ஒளியை நடிகர் மீது உருவாக்க வேண்டும். அதாவது, திரைக்குப் பின்னால் பச்சை; நடிகர் மீது கதையின் உலகம். இரண்டையும் குழப்பக் கூடாது. மேலும் பச்சைத் திரையின் வெளிப்பாடு மற்றும் நடிகரின் வெளிப்பாடு ஒரே அளவில் இருக்க வேண்டியதில்லை. பச்சைத் திரை சமமாகவும் போதுமான அளவிலும் வெளிப்பட வேண்டும்; நடிகரின் வெளிப்பாடு அவரது முகம், உடை, தோல் நிறம் மற்றும் பின்னர் சேர்க்கப்படும் உலகத்தின் ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தனியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
நடிகர் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் குறிக்க தரையில் குறியீடுகள் இடப்படுகின்றன. அவரது பார்வை எங்கு இருக்க வேண்டும் என்பதற்கும் குறியீடுகள் பயன்படுத்தப்படும். பின்னர் கணினியில் சேர்க்கப்படும் கதாபாத்திரம் அல்லது பொருள் அந்த இடத்தில்தான் இருப்பதாகக் கருதப்படும்.இவ்வாறு ஒரு சிறிய குறியீடு கூட பின்னர் உருவாகும் பெரிய காட்சியின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கிறது.
கேமரா நகரும் விஎஃப்எக்ஸ் காட்சிகளில் சவால் இன்னும் அதிகம். லென்ஸின் குவிய நீளம், கேமராவின் உயரம், கோணம், இயக்கப் பாதை போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் டிஜிட்டல் பொருள் காட்சிக்குள் மிதப்பது போலத் தோன்றும். ஒளியும் அதே அளவு முக்கியமானது. ஒரு டிஜிட்டல் பொருளின் மீது விழும் ஒளி, அதைச் சுற்றியுள்ள உண்மையான உலகத்துடன் பொருந்த வேண்டும். சூரிய ஒளி, பிரதிபலிப்பு ஒளி, நிழல், சுற்றுப்புற நிறம் ஆகியவை அனைத்தும் ஒரே இயற்கை விதியைப் பின்பற்ற வேண்டும்.
இதற்காகப் படப்பிடிப்பின்போது ஒளியின் தன்மை மற்றும் திசையைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், பின்னர் டிஜிட்டல் உலகை உருவாக்க உதவும் ஒளித் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. நவீன விஎஃப்எக்ஸ் காட்சிகளில் நடைமுறை விளைவுகளும் முக்கியமானவை. உண்மையான புகை, நீர், தூசி, தீ, மழை போன்றவற்றை கேமராவில் பதிவு செய்து, அவற்றுடன் டிஜிட்டல் விளைவுகளை இணைத்தால் காட்சிக்கு இயற்கையான உணர்வு கிடைக்கிறது.
நிஜத்தைப் பயன்படுத்தக்கூடிய இடத்தில் பயன்படுத்தி, முடியாததை மட்டும் கணினியிடம் ஒப்படைப்பதே சிறந்த அணுகுமுறை. விஎஃப்எக்ஸ் என்ற காலத்தின் ஒளிப்பதிவாளர் ஒரே நேரத்தில் மூன்று உலகங்களைப் பார்க்க வேண்டும். கேமரா முன் இருக்கும் நிஜ உலகம்; பின்னர் உருவாகப்போகும் கற்பனை உலகம். இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்த்து நம்பப்போகும் பார்வையாளரின் மன உலகம்.
கேமரா பார்க்காததை ஒளிப்பதிவாளர் முன்கூட்டியே கணிக்க வேண்டும். பச்சைத் திரைக்கு முன்னால் இன்னும் உருவாகாத ஓர் உலகத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் விஎஃப்எக்ஸ் காலத்தின் புதிய விரிவாக்கப்பட்ட ஒளிப்பதிவு.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)