தமிழ் சினிமா

‘வா வாத்தியார்’ விமர்சனம்: கார்த்தி - நலன் குமாரசாமி காம்போ கலக்கலா, சறுக்கலா?

டெக்ஸ்டர்

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என்ற இரண்டு மறக்க முடியாத படங்களை கொடுத்த நலன் குமாரசாமி அதன் பிறகு படம் இயக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் நலன், கார்த்தியுடன் இணைந்து தந்திருக்கும் படம் ‘வா வாத்தியார்’. தயாரிப்பு சிக்கல், நீதிமன்ற வழக்கு என பல பிரச்சினைகளைக் கடந்து ஒருவழியாக படம் இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.

மாசிலா என்ற கற்பனை நகரத்தில் எம்ஜிஆர் இறந்த அதே ஆண்டில் அதே தினத்தில் அதே நேரத்தில் பிறக்கிறார் ராமு (கார்த்தி). தீவிர எம்ஜிஆர் ரசிகரான அவரது தாத்தா (ராஜ்கிரண்), அவரை எம்ஜிஆரைப் போல நேர்மையான ஆளாக வளர்க்க விரும்புகிறார். வளர்ந்ததும் போலீஸ் அதிகாரியாக மாறும் ராமு, தாத்தாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஊழல் பேர்வழியாக இருக்கிறார். 

இன்னொருபுறம், தொழிலதிபர் பெரியசாமி (சத்யராஜ்) மற்றும் முதல்வர் (நிழல்கள் ரவி) இணைந்து ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்காக அப்பாவி மக்களைப் பலிகடா ஆக்கத் திட்டமிடுகின்றனர். இந்தச் சதியை 'மஞ்சள் முகம்' எனும் ஹேக்கர் குழு அம்பலப்படுத்துகிறது. இந்தச் சூழலில் ஏற்படும் ஒரு தனிப்பட்ட இழப்பால், ராமுவுக்குள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவருக்குள் 'வாத்தியார்' எம்ஜிஆரின் ஆல்டர் ஈகோ வெளிப்படத் தொடங்குகிறது. அதன் பின் ராமு எப்படி நீதியின் பக்கம் நின்று எதிரிகளை சதியை முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் நலன் குமாரசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற ஒரு சீரியஸான சமூகப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதை எம்ஜிஆர் என்ற பிம்பத்துடன் ஒரு ஃபேண்டசி, சூப்பர்ஹீரோ பாணியில் சொல்ல முற்பட்டது ஒரு துணிச்சலான முயற்சி. கார்த்தியின் பிறப்பு, அவரது பின்னணி, குணாதிசயங்கள் ஆகியவற்றை ஆடியன்ஸுக்கு சொல்ல முயன்ற விதம் கவர்கிறது. கிட்டத்தட்ட படத்தின் மையக்கருவே இடைவேளையில்தான் தொடங்குகிறது என்றாலும் பெரிய தொய்வுகள் எதுவும் இன்றி படத்தை ஓரளவு சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கிறார் இயக்குநர். 

ஆனால் படத்தின் மையக் கருவான நாயகன் எம்ஜிஆராக மாறும் இடத்தில் படம் நுழைந்தபிறகுதான் பிரச்சினையும் தொடங்கி விடுகிறது. அதன்பிறகு கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் எங்கெங்கோ சென்று குழப்பியடித்து பார்ப்பவர்களை ஒருவழியாக்கி விட்டனர்.ஒரு சூப்பர்ஹீரோ பாணி படமாகவும் இல்லாமல், சாதாரண மசாலா டைப் கதையாகவும் இல்லாமல் படம் தடுமாறுகிறது. ஒரு பக்கம் ராமுவாக ஹேக்கர்ஸ் குழுவை தேடுவதும், இன்னொரு பக்கம் வாத்தியாராக அவர்களுக்கே உதவி செய்வதும் என ஒரு சுவாரஸ்யமாக கான்செப்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொத்துக் கறி போட்டுள்ளனர். 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது கார்த்தி மட்டுமே. மொத்த படத்திலும் அவரது நடிப்பு ஒரு உயிர்நாடியாக செயல்படுகிறது. ஊழல் போலீஸாக ஒரு பக்கம் ரகளை செய்பவர், எம்.ஜி.ஆராக உருமாறும் போது காட்டும் அந்த கம்பீரம் மற்றும் மேனரிசம் ரசிக்க வைக்கிறது. சத்யராஜ் வில்லனாக மிரட்ட முயன்றாலும், அவரது கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.கிருத்தி ஷெட்டிக்கு படத்தில் என்ன வேலை என்பது கடைசி வரை புரியவில்லை. அவர் யார், அவரது பின்னணி என்ன என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. ஓரிரு காட்சிகள் வந்தாலும் ஆனந்தராஜ் ரசிக்க வைக்கிறார். 

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பழைய எம்ஜிஆர் பாடல்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை எங்கும் அழுத்தமாக தெரியவில்லை. பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை. 

ஒரு நல்ல கமர்ஷியல் எண்டர்டெய்னராக வருவதற்கான எல்லா அம்சங்களும் கொண்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதற்கான சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்காததால் திருப்திகரமான அனுபவத்தை தரத் தவறுகிறது ‘வா வாத்தியார்’.

SCROLL FOR NEXT