துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘லீடர்’. ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்போது, “ஓர் அப்பாவி அப்பாவும் மகளும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் கேங்ஸ்டர் கும்பல் நுழைகிறது, பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய தலைமுறையினருக்குப் பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு வேலையில் யார் ஒருவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ, அந்த வேலை அற்புதமாக அமையும்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரயிலில் படமாக்கினோம். குறுகலான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், அவர் ஒன்றுதான் என்றார். மேலும் 2 அல்லது 3 ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள். இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிபடும் என்று தெரியாது.
எனக்கு கூட அடிபடலாம் என்றேன். 10-வது நாளில் எனக்குக் காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா என்ற நிலை ஏற்பட்டது. உடன் பணியாற்றும் தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்” என்றார்.