ராஜஸ்தானில் கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடல் சென்னை வந்தது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று காலை நடக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. அவருடைய முழு பெயர் ரத்தன் லால் பகத்ராம் சவுத்ரி.
இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். சமீபத்தில் அங்கு சென்ற அவர், செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவருக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டது.
அங்கு அவர் உடலைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் ஜீவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழில், 1990-களில் ஏராளமான புதிய இயக்குநர்களையும் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர் ஆர்.பி.சவுத்ரி. விக்ரமன் அறிமுகமான ‘புது வசந்தம்’, கே.எஸ்.ரவிகுமார் அறிமுகமான ‘புரியாத புதிர்’, சரத்குமார் நடித்த ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்ய வம்சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளார்.
இப்போது, விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ படத்தைத் தயாரித்து வந்தார். இந்நிறுவனத்தின் 100-வது திரைப்படத்தை விஜய் நடிப்பில் தயாரிக்க இருப்பதாக ஆர்.பி.சவுத்ரி அறிவித்திருந்தார். அது நடக்கவில்லை. பின்னர், ‘சூர்ய வம்சம்’ படத்தின் 2-வது பாகத்தைத் தயாரிக்க இருந்தார்.
மறைந்த ஆர்.பி.சவுத்ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் படங்களில் நடித்து வருகின்றனர். ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச் சடங்கு கிருஷ்ணாம்பேட்டையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.