தமிழ் சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை

ப்ரியா

பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நந்தினி, பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 2019 முதல் சின்னத்திரையில் பயணிக்கத் தொடங்கினார்.

கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்த நந்தினி, தமிழில் ‘கௌரி’ தொடர் மூலம் பிரபலமானார். நந்தினியின் தந்தை 2023-ல் காலமானார். அதைத் தொடர்ந்து, அவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தினால் அவர் அந்த அரசு வேலையை ஏற்க மறுத்துவிட்டார்.

அரசு வேலையை விட்டுவிட்டு நடிப்பைத் தொடர்வதில் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தனது டைரியில் அவர் எழுதியுள்ள குறிப்பில், தனது உணர்வுகளைக் குடும்பத்தினர் புரிந்து கொள்ளவில்லை என்றும், அரசு வேலையில் தனக்கு விருப்பமில்லை என்றும் நந்தினி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தன்று இரவு, தனது நண்பர் புனீத் என்பவரைச் சந்தித்துவிட்டு நள்ளிரவு 11 மணிக்கு விடுதிக்கு நந்தினி திரும்பியுள்ளார். அதன் பிறகு புனீத் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நந்தினி போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த புனீத் விடுதி மேலாளருக்குத் தகவல் அளித்து, கதவை உடைத்துப் பார்த்தபோது நந்தினி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நந்தினியின் திடீர் மறைவுச் செய்தி தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு சின்னத்திரை கலைஞர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT