ஊன் இசை, உயிர் இசை, உணர்வு இசை என்று வாழ்ந்த தேனிசை தென்றல் தேவா காலமாகிவிட்டார். பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருந்த, அண்மையில் கூட இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவரின் மறைவு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இசை எனில் கனிவு, இசை எனில் பணிவு, இசை எனில் அடக்கம், இசை எனில் இயக்கம் என்று அறியப்பட்டவராக இருந்த தேவா எனும் எளிய மனிதரே எல்லோரது மனக்கண் முழுவதும் நிறைந்து நிற்கிறார்.
எந்தத் தம்பி தன்னுடைய திரை இசை நுழைவுக்கு ஆகப் பெரிய காரணம் என்று எப்போதும் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாரோ அந்த இசைக் கலைஞர் சபேஷ் மறைந்த ஓராண்டில் நேர்ந்துவிட்டது தேவாவின் பிரிவு!
1950-ம் ஆண்டில் பிறந்தவரான தேவநேசன் சொக்கலிங்கம் எனும் தேவா மிக இளவயதில் இருந்தே இசையே வாழ்க்கை என்றானவர். 1989-இல் தான் ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது என்றாலும், அதற்கு முன்பு ஒரு கால் நூற்றாண்டு வாய்ப்புக்காக அலைந்ததை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.
எத்தனையோ முட்டுக்கட்டைகள் கடந்து திடும் என்று ஒரு வாய்ப்பு கைக்கு வந்து ஒரு திங்கள்கிழமை ராகுகாலத்திற்கு முன்பே வரச் சொன்னார்கள் என்று கையில் இருந்த இசைக்கருவிகளோடு இளவல்கள் சகிதம் புறப்பட்ட ஆட்டோ வள்ளுவர் கோட்டம் கடக்கு முன்பே பழுதாகி நின்றுவிட, இசைக்கருவிகளோடு ஓட்டமும் நடையுமாக வேர்க்க விறுவிறுக்க போய்ச் சேர்ந்த கதையை அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசி இருந்தார், வலிக்க வலிக்க வந்து சேர்ந்த இசைப் பயணம் அது.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மற்ற நாயக நடிகர்கள் சிலர் தாங்களும் வெள்ளித்திரையில் தோன்றி சிறப்பான படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தது போலவே, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனும் இரு மாபெரும் இசை வித்தகர்கள் அதிர வைத்துக் கொண்டிருந்த அதே வேளையில் திரை இசை உலகில் தன்னை ஓயாது மெய்ப்பித்த வண்ணம் அருமையான பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தார் தேவா என்பது தான் சிறப்பு. அதற்கான அவரது இடையறாத உழைப்பு, கற்பனைத் திறன், அர்ப்பணிப்பு மிக்க பணி, கவிஞர்கள், இசைக்கலைஞர்களோடு அவருக்கு இருந்த கருத்தொற்றுமை இன்ன பிற பண்பாக்கங்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.
அடுத்தவரைக் கொண்டாடி மகிழ்வதில், திறமையானவர்கள் யாராயிருப்பினும் பாராட்டிப் பேசுவதில், புகழ் வெளிச்சத்தில் கர்வ இருளில் சிக்கி விடாது இருந்ததில், முன்னோடிகளை மதிப்போடு எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டிருந்ததில் தேவா அற்புதமான மனிதராக உயர்ந்திருந்தார்.
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீது பெருங்காதல் கொண்டிருந்தார் தேவா. அதற்கு முக்கிய காரணம், எம்எஸ்வி அவர்களது குழந்தைமைத் தன்மை, தம்மின் தம் இளையவர் திறமை மாநிலத்து மன்னுயிருக்கு எல்லாம் இனிது என்ற பெருந்தன்மை! தேவாவின் கானா பாடல்களைக் கொண்டாடி ரசித்து இருக்கிறார் மெல்லிசை மன்னர்.
திரை இசை இலக்கியத்தில் கானாவுக்கு ஓர் அத்தியாயம் பொறித்துச் சென்றிருப்பவர் தேவா. எளிய மக்களின் காதலை, கண்ணீரை, கஷ்ட நஷ்டங்களை உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு நேரடியாக உண்மையாகக் கடத்தும் கானா இசையின் இலக்கணத்தை அசாத்தியமாக லட்சக்கணக்கான ரசிக நெஞ்சங்களுக்கும் கொண்டு சேர்த்தவர் தேவா.
'குன்றத்துல கோயிலக் கட்டிக் கும்மாளமா கும்மி அடிச்சுக் கொஞ்சுங்கிளி போல வந்த அஞ்சல.... உன்னக் கோயிலு கட்டிக் கும்புடப் போறன் நெஞ்சில...' போன்ற பாடல்கள் அச்சு அசலான சென்னை ஆதி மக்களின் காதல் மொழி. ‘காதல் கோட்டை’யின் 'கவலைப் படாதே சகோதரா', தேவாவின் குரலுக்காகவும் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் இருந்தது.
'வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி' உள்ளிட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பவை. 'சலோமியா' (கண்ணெதிரே தோன்றினாள்) பாடலுக்காகக் கடல் கடந்து ரசித்துப் பாராட்டிய ரசிகையின் அன்பை நெகிழ்ச்சியோடு ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார் தேவா. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் 'பஞ்சு மிட்டாய்' பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கொண்டாட வைத்தது.
இளையராஜா கற்றுக் கொண்ட தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவர் தேவா. வேறு சிலரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார். சங்கதிகள் போட்டுப் பின்னி எடுக்கும் அருமையான பாடகர் ஹரிஹரன் குரலில் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' (ஆசை), 'அவள் வருவாளா' (நேருக்கு நேர்), ஹரிஹரன், சுஜாதா குரல்களில் 'காதலா... காதலா...' (அவ்வை சண்முகி) போன்ற அபாரமான மெல்லிசைப் பாடல்கள் பலவும் வழங்கி அசத்தி இருப்பவர் அவர்.
விஜயகாந்த் படங்கள் எப்போதும் இசைப் பாடல்களுக்காகப் பேசப்படுபவை. ‘சொக்கத் தங்கம்’ படத்தின் 'என்ன நெனச்சே, நீ என்ன நெனச்சே' பாடலை தேவாவின் திறமையை மெச்சிக் கூறுவார் உன்னி கிருஷ்ணனோடு இணைந்து அந்தப் பாடலைப் பாடிய இசைக் கலைஞர் அனுராதா ஶ்ரீராம். ‘கருப்பு நிலா’, 'ராசி தான் கை ராசி தான்', 'சோறு கொண்டு போற புள்ள' உள்ளிட்டு "என் ஆசை மச்சான்" படத்தின் அத்தனை பாடல்களும் தேவா இசைக்குப் பெரும் புகழ் சேர்த்தவை.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா என்று அனைத்து முன்னணி நடிகர் படங்களையும் இசைக்காகவும் பேச வைத்திருந்தார் தேவா. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் இசை, அண்ணாமலை படத்தில் தேவா அமைத்த இசைக் கோவை அப்படியே நிலைத்து விட்டது! பால்காரர்கள் கொண்டாட ஒரு 'வந்தேண்டா பால்காரன்' என்றால், ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாட ' நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்' பாடலும் வழங்கியவர் தேவா.
அவரது இசை நுட்பம் கொண்டாடுவோர், 'மனம் விரும்புதே உன்னை' (நேருக்கு நேர்), 'நலம் நலமறிய ஆவல்' (காதல் கோட்டை), 'புல்வெளி புல் வெளி' (ஆசை) போன்ற பல பாடல்களை நினைவு கூர்வர். எஸ்பி பாலசுப்பிரமணியன், சித்ரா, மனோ, சுஜாதா, அனுராதா போன்ற பாடகர்கள் எல்லோரும் தேவாவின் இசையில் இணைந்து பணியாற்றியது பற்றி மேடைகளில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் உள்ளார்ந்த முறையில் பெருமையோடு குறிப்பிடுவது உண்டு.
மிக வேகமாக மெட்டு அமைப்பவர், பல்லவியை அருமையாக அமைத்து விடுபவர், இசைக் கருவிகள் இசைப்போரை அன்போடு வழி நடத்துபவர் என்றெல்லாம் சிறப்பாகக் குறிப்பிடுகின்றனர். இசைக்கு, கற்பனைத் திறனுக்கு, சாதனைகளுக்கு வர்ண பேதங்கள் கிடையாது என்பதை மெய்ப்பித்த கலைஞர்களில் முக்கியமானவர் தேவா.அவருடைய இளவல் சபேஷ், முரளி போலவே, மகன் ஶ்ரீ காந்தும் நல்ல இசை அமைப்பாளர், அவரைப் போலவே அடக்கமானவர்.
2020-இல் கவிஞர் காமகோடியன் தான் எம்எஸ்வி அவர்களோடு இயங்கிய நேசத்தைக் கொண்டாடி எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற தேவா, "எனக்கு திருமணம் முடிந்து சில நாட்களுக்குள் மனைவியைக் கை நீட்டி அடித்து விட்டேன், தவறு தான், மன்னிப்பு கேட்டுக் கொண்டேன், பாவம், அவர் விளக்குமாறு எடுத்து வீட்டை சுத்தம் செய்யப் போகும்போது விஸ்வநாதன் அண்ணன் படத்தில் பட்டு விட்டது பார்த்து உடனே பொங்கி எழுந்த கோபத்தால் அடித்து விட்டேன், ஏன்னா என் தெய்வம் அவரு... தேனிசை தென்றல்னு எனக்குப் பட்டம் கொடுத்து, அந்த விழாவில், தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் தேவாவுக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று வேண்டுகோள் வைத்தார், நிறைய படங்கள் கிடைத்தது அப்புறம்" என்று நெக்குருகிப் பேசினார். ஓராண்டில் 30 படங்கள் வரை கூட வெற்றிகரமான பாடல்கள் கொடுத்து 400 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
ஆனால், எந்த மேடையிலும், புதிய வளரும் இசைக் கலைஞர்கள் முன் நிற்கும்போதும் அசாத்திய பணிவோடும், வாழ்த்தும் உள்ளத்தோடும், வணங்கும் கரங்களோடும், புன்னகை பூத்த மலர்ந்த முகத்தோடும் தோன்றுவார் தேவா. இசை மட்டுமல்ல, அவர் மொழியும் தேன், அவர் பாடல்கள் நெஞ்சை எப்போதும் வருடும் தென்றல் தான்!