தமிழ் சினிமா

திரைத் தெறிப்புகள்: பி.சி.ஸ்ரீராம் ஆதங்கம் முதல் காஜல் அகர்வால் அட்வைஸ் வரை

ப்ரியா

தொடர் மின்வெட்டு குறித்து பி.சி.ஸ்ரீராமின் ஆதங்கம் முதல்  செல்போன் பயன்பாடு குறித்த காஜல் அகர்வாலின் அறிவுரை வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இது. 

> மின்வெட்டு அன்றாட நிகழ்வாகி விட்டது. திறன்மிக்க மின் துறை நிர்வாகத்துக்கு என்ன ஆயிற்று என திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

> ‘மைசா’ படத்தில் ஒரு காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதைக் கேட்டு நான் மிகவும் பயந்துவிட்டேன். இருந்தாலும் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்காக துணிந்து அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன் என ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

> திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் பாலியல் நெருக்கக் காட்சிகளைப் படமாக்குவது இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது. சித்தார்த், அதிதி ஆகியோர் 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' -ல் நடித்தபோது, அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இருப்பதால் படப்பிடிப்பை எளிதாக்கியது  என இயக்குநர் விஷால் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

> தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடிகரும் பாடலாசிரியருமான சிவகார்த்திகேயன் முறைப்படி இன்று உறுப்பினரானார். சங்கத்தின் தலைவர் சேரன் தலைமையிலான நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் உறுப்பினராகச் சேர்ந்துள்ளார்.

> 2024-ல் வெளியான திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கு, முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். அதில், ‘பிரம்மயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மம்மூட்டிக்கு இது 4-வது தேசிய விருது ஆகும்.

> குஜராத்தில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது இவருக்கு 2-வது தேசிய விருது ஆகும்.

> 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதியும் தனுஷும் குடியரசு தலைவரிடம் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.

> அதேபோல் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் தனுஷ். இது அவரது 6-வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

> நடிகர் மம்மூட்டி 1973 - 1976 ஆண்டு தான் படித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி வகுப்பு நண்பர்களைச் சந்தித்துள்ளார். 50 ஆண்டுகள் நிறைவு என்பதால் அன்றிருந்தவர்களில் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். தனது பழைய நண்பர்களுடன் இணைந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

> 'தசரா' படத்துக்குப் பின் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் மீண்டும் நானி நடித்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. 80-களின் செகந்திராபாத் (தெலங்கானா) நகரத்தில் ஒரு குடிசைப்பகுதி மக்கள் ஒடுக்கப்பட்ட கதையிலிருந்து மீண்டெழும் பீரியட் ஆக்‌ஷன்-டிராமா கதையான இதில், நானிக்கு ஜோடியாக கயாது லோஹர் நடித்துள்ளார்.

> சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நாயகன் நிவின் பாலிக்கு இணையான வேடம் ஏற்றுள்ளார் சூரி. அவருடைய அடுத்த பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

> ராகவா லாரன்ஸ், 'மஹாவீர் கர்ணா' என்ற படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ரமேஷ் வர்மா இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

> உணவகத்திற்குச் சென்றால்கூட கணவரும் மனைவியும் அவரவர் செல்போன்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆரோக்கியமான உறவுகளுக்கு உரையாடல்களே முக்கியமானது. நானும் என் கணவரும் உணவகங்களுக்குச் சென்றால் இருவரும் பேசுவதையே விரும்புகிறோம். அந்த நேரத்தில் செல்போன் பயன்பாடு இருக்காது என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT