குஷ்பு சுந்தருக்கு கேடயம் வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன். தயாரிப்பாளர் சத்தியஜோதி தியாகராஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் டி.சிவா அருகில் உள்ளனர்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு செப்டம்பர் வரை வெளியான குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குக் கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஷ்பு சுந்தர், சவுந்தர்யா ரஜினிகாந்த், விஜய் ஆண்டனி, கண்ணன் ரவி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் ராஜ்மோகனிடம் நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் அவர் பேசும்போது, “நானும் இந்த சினிமா குடும்பத்தில் ஒருத்தன். சினிமா துறை மேல் அரசுக்குத் தனிக் கவனம் உள்ளது. அங்கிருந்து வந்தவர்தான் முதல்வராக உள்ளார். இனி தமிழக அரசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் சினிமாக்களுக்கான அரசு ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாகப் பேசுவோம்” என்றார்.
முன்னதாக, “4 சதவீத உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்குதல். சிறு முதலீட்டுத் திரைப் படங்களுக்கான நிலுவையில் உள்ள மானியங்களை வழங்குதல், தற்போதுள்ள ரூ.7 லட்சம் மானியத்தை ரூ.10 லட்சமாக உயர்த்துதல், சிறு முதலீட்டுத் தமிழ்த் திரைப்படங்களுக்கு பிரத்யேகமாக ஓடிடி தளத்தை உருவாக்கி, அவற்றைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் ராஜ்மோகனிடம் வழங்கப்பட்டது.