தமிழ் சினிமா

‘கட்டா குஸ்தி 3’ உருவாக வாய்ப்பு இருக்கிறது: இயக்குநர் செல்லா அய்யாவு தகவல்

நிலா

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'கட்டா குஸ்தி', ‘கட்டா குஸ்தி 2’ படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் செல்லா அய்யாவு. இவர் அடுத்து கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், 'கட்டா குஸ்தி -3’ உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: 'கட்டா குஸ்தி’-க்கு கிடைத்த வரவேற்புதான் அந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகக் காரணம். பொதுவாகவே ‘பார்ட்- 2’ பண்ணும்போது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நான் விஷ்ணு விஷால் சாரிடம் இதுபற்றி சொன்னபோது, ‘பெயருக்காக பார்ட்- 2 பண்ண வேண்டாம், சரியான கதை அமைந்தால் மட்டும் பண்ணலாம்’ என்றார். அதன் பிறகு 6 மாதமாக ஸ்கிரிப்ட் எழுதினேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்திருந்ததால் தொடங்கினோம்.

முதல் பாகத்தை விட 2-ம் பாகம் இன்னும் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. அடுத்தடுத்து பாகங்கள் பண்ணும்போது, வெற்றி பெற்ற படத்தின் தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு பண்ணக் கூடாது என நினைத்தேன். கதையிலும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படிக் கதை அமைந்தது, அதனால் இரண்டாம் பாகம் உருவானது.

நல்ல கதை அமைந்தால் 'கட்டா குஸ்தி -3’ பாகம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து கென் கருணாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. காதல், நகைச்சுவை மற்றும் குடும்பங்கள் ரசிக்கும்படியான கதையாக இருக்கும்." இவ்வாறு செல்லா அய்யாவு கூறினார்.

SCROLL FOR NEXT