இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படம் ‘டோரதி’. வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள் என்று பேசுபொருளாகியுள்ளது.
படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செங்காந்தள் வாசக வட்டம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் கலந்து கொண்டு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ் பேசியதிலிருந்து...
டோரதி பெயர் தேடல்...
‘டோரதி’ திரைப்படத்துக்கு தலைப்பு முடிவு செய்த ப்ராசஸ் சுவாரஸ்யமானது. எனக்கு ஒரு தேவதையை மையப்படுத்தி பெயர் வைக்க வேண்டும் என்றிருந்தது. கதை மதுரையில் நடைபெறுகிறது, அந்த தேவதையின் எண்ணம் போல் அவளது பெயரும் மதுரை மண்ணுக்கு அந்நியமானதாக இருக்க வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் டோரதி என்ற பெயர் சிக்கியது.
டோரதி என்றால் கடவுளின் பரிசு. அதனால் அந்தப் பெயரை இறுதி செய்தேன். சிலர் ஃப்ரெண்ட் ஆஃப் டோரதி என்றால் தன்பாலின ஈர்ப்பாளரை சிலேடையாகக் குறிப்பிடுவது என்று இப்போது சுட்டிக்காட்டுகின்றனர். அப்படி யோசிக்கவில்லை. கதைப்படி சுப்புவுக்கு தேவதை டோரதி என்பதால் அந்தப் பெயரை முடிவு செய்தேன்.
இளையராஜா இல்லாவிட்டால்..
படத்தின் முக்கிய பலம் இளையராஜா தான். படத்தை எடுத்ததும் அவரிடம் திரையிட்டுக் காட்டினேன். அவர் ஓகே சொன்னால் அவர்தான் இசை, இல்லாவிட்டால் வேறு என்று யோசித்திருந்தேன். அந்த நொடிவரை என் மனதில் இருந்தவர் இளையராஜா தான். படத்தைப் பார்த்த அவர் இசையமைக்க ஒப்புக்கொண்டு அற்புதம் நிகழ்த்தியுள்ளார். அவர் இல்லையென்றால் டோரதி இத்தனை பெரிய அளவில் மக்களை சென்று சேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
விசில் வீரய்யாவாக நாசர்!
படத்தில் விசில் வீரய்யாவாக நடிகர் நாசரை தான் நான் யோசித்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் இணைய முடியாததால் நடிகர் முத்துக்குமாரை முடிவு செய்தோம். முத்துக்குமாரை முதலில் சுப்புவின் அண்ணன் கதாபாத்திரத்துக்கு தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் நாசர் இல்லையென்றதும், மீண்டும் தனது விருப்பததை சொன்னார். ஆடிஷன் செய்தோம். அவர் நடித்தார். அவர் மிகவும் நல்ல மனிதர்.
இவ்வாறாக பல்வேறு தகவல்களையும் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தபோது...
டோரதி படத்தில் கீர்த்தி சுரேஷின் மரணத்துக்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. அது சினிமா ஆர்வலர்களுக்கு புரியும், ஆனால் வெகு ஜனங்கள் பலருக்கும் கேள்வியாகவே இருக்கிறது? உங்கள் விளக்கம் என்ன?
படத்துக்கு திரைக்கதை எழுதியபோதே கீர்த்தி மரணத்துக்கு நான் காரணம் எழுதவில்லை. அது எந்த மாதிரியான குடும்பம் என்பதை ஆரம்பத்திலிருந்தே நிறுவியிருந்ததால் அது தேவைப்படவில்லை. கீர்த்தியின் உடலில், அவர் கணவர் உடலில், விசில் வீரய்யாவின் கை, தலையில் காயம் இருக்கும். ஆக, அந்த சம்பவம் கொலை. அதற்கு முன்னால் கீர்த்தி போராடியிருக்கிறார். கொலைக்குப் பின்னால் மிக அற்பமான காரணமும் இருக்கலாம், இல்லை வேறேதும் பெரிய காரணமும் இருக்கலாம். அதை ஆடியன்ஸ் முடிவு செய்து கொள்ளட்டும் என்றுதான் எழுதாமல் விட்டேன்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் என்னை சந்திக்கும் பலரும் அந்த மரணத்துக்கு வெவ்வேறு காரணங்களை புரிந்து வைத்திருப்பதைப் பார்க்கும் போது நான் அதை விவரிக்காமல் விட்டது சரியென்றே தோன்றுகிறது. ஒரு ரசிகர், அந்தக் கொலை வீட்டில் அன்றாடம் புட்டு சமைப்பதற்காகக் கூட நடந்திருக்கலாம் என்றார். அந்தக் குடும்பம் அதையும் செய்யக்கூடியதே. கொலைக்கு பின்னர் ஸ்டேஷன் வாசலில் டீ குடித்துக் கொண்டு, கவுண்டமணி காமெடி பார்க்கும் வக்கிர மனநிலை கொண்டவர்கள் என்பதால் விளக்கவில்லை என்றார்.
நம் எல்லோருக்குமே ஏதோ ஒருவகையில் நான் என்ற அகந்தை வரும். அது அடிப்படை மனித ஈகோ அல்லது ஆண் ஈகோ என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் மூவரும் டோரதி-க்கு முன்னர் பின்பு உங்களின் ஈகோ என்னவானதாக உணர்கிறீர்கள்?
ரிஷிகாந்த்: டோரதி-க்கு முன்னர் நான் மூன்றாம் பாலினத்தரையும் மதிக்க வேண்டும் என்றளவில் இருந்தேன். சிறு வயதிலிருந்தே எனது அம்மா எல்லோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார். அது இயல்பிலேயே எனக்குள் இருந்தது. ஆனால் டோரத்தி-க்குப் பின்னர், நம்முடைய சக மனிதர்கள் அவர்கள். அவர்களை மதிப்பதாக காட்டிக் கொள்ள நாம் யார்? அவர்களுக்கும் சில உணர்வுகள் இருக்கும். அதுவும் நமது உணர்வுகளைப் போன்றதே. நாம் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையை மாற்றிக் கொண்டேன்.
சனந்த்: எனக்கு அடிப்படையிலேயே ஈகோ இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆண் ஈகோ இருந்திருந்தால் சுப்பு கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்திருக்க மாட்டேன். டோரத்தி-க்குப் பின்னர் எங்கேனும் எனக்குத் தெரியாமல் ஏதேனும் ஈகோ இருந்திருந்தால் அதுவும் நொறுங்கி நான் இன்னும் அதிகமாக மனிதனாக மாறியிருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ்: டோரதி படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவருடன் பணி செய்யும்போது தான், இத்தனை நாட்களாக நான் என்னைப் பற்றி நினைத்து வைத்திருந்த அனைத்தும் நொறுங்கியது.