பாலு மகேந்திரா இயக்கிய ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘மறுபடியும்’ உள்பட பல படங்களில் நடித்தவர் வினோதினி. இப்போது குணசித்திர வேடங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் ஸ்பா ஒன்றில் தனது தாலியை தொலைத்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : மன அழுத்தமாக இருக்கிறது என்று கடந்த வெள்ளிக்கிழமை சிஐடி காலனியில் உள்ள ஸ்பா ஒன்றுக்கு சென்றிருந்தேன்.
அப்போது அங்கிருந்தவர் கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும், தாலியைக் கழற்றி விடுங்கள் என்றார். கழற்றிக் கொடுத்தேன். அதை அவர் ஒரு டப்பாவில் போட்டார். மசாஜ் முடிந்ததும் தூங்கும் மூடில், தாலி செயினை மறந்து வீட்டுக்குச் சென்றுவிட்டேன். மறுநாள் கணவர் வீட்டில் ஒரு இறப்பு. அன்று அங்கு பிசியாக இருந்துவிட்டேன்.
ஞாயிற்றுக்கிழமைதான் தாலி செயின் ஞாபகம் வந்தது. உடனே அடித்துப் பிடித்து ஸ்பாவுக்கு சென்று அந்த தாலி செயினை கேட்டேன். அவர்கள், ‘டப்பாவில் இல்லையே,ஸாரி எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார்கள். கடந்த 2 மாதமாக இருந்த சோகத்தில் இருந்து சஜமான வாழ்க்கைக்குத் திரும்பினால், அதிக சோகமாகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டேன்.
இதுபற்றி போலீஸில் புகார் செய்திருக்கிறேன். என் தாலி கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவு ஏன் என்றால், ஸ்பாவுக்கு செல்கிறவர்கள் தயவு செய்து அங்கு இருப்பவர்களை நம்பி, எந்த விலையுயர்ந்த நகைகளையும் கொண்டு செல்லாதீர்கள். அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. இதைச் சிரித்துக்கொண்டே சொன்னாலும் அது மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு வினோதினி கூறியுள்ளார்.