ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் 9-ம் தேதி அன்று வெள்ளித்திரையில் வெளியாகிறது.
விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக அனல் அரசு பணியாற்றி உள்ளார்.
ஜனநாயகன் ட்ரெய்லர் எப்படி? - இந்த ட்ரெய்லரின் மொத்த ரன் டைம் 2.52 நிமிடங்கள். இதில் ஆக்ஷன் காட்சிகளும், அரசியல் பஞ்ச்களும் அதிகம் நிறைந்துள்ளது. தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயர் கொண்ட பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் விஜய்யின் கடைசி படம் என்பதை கருத்தில் கொண்டு இயக்குநர் ஹெச்.வினோத் தனது உழைப்பை செலுத்தி உள்ளார் என்பது தெரிகிறது.
அச்சுறுத்தல், அச்சத்தில் இருக்கும் தன் மகள் விஜியை காக்கும் தகப்பனாக விஜய் இதில் நடித்துள்ளார். இதுதான் இந்த படத்தின் ஒன்லைன். கடந்த 2023-ல் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’-யின் கதையை அடித்தளமாக கொண்டுள்ளது ஜனநாயகம் படத்தின் கதை என ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் தனது தனித்துவ சினிமா டச்களை இயக்குநர் ஹெச்.வினோத் இதில் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது.
தவெக மூலம் அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய்க்கு இது கடைசி படம் என்ற அறிவிப்புடன் இந்த படத்தின் பணிகள் தொடங்கியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.