தமிழ் சினிமா

“என் படத்துக்கு 48 கட் கொடுத்தது சென்சார்” - ஜீவா தகவல்

செய்திப்பிரிவு

நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் ஜன.15-ல் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் ஜீவா கூறியதாவது: மலையாளத்தில் வெளியான ‘ஃபாலமி’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் கேட்டிருந்தார்.

சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அந்தப் படத்தின் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டு தெரிவித்து மெசேஜ் அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக் கொண்டேன்.‌ பிறகு இயக்குநர் ஒருநாள் என்னைச் சந்தித்துக் கதை சொன்னார். பிடித்திருந்தது, ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதை உருவாக்கினோம். சிறிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டு தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது.

என்னுடைய 45-வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்குக் கிடைத்தது. நிதிஷ் எழுதிய இந்த கதையில் அனைவருக்கும் தனித்துவம் இருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைந்து புது முயற்சியில், புது ட்ரீட்மென்ட்டில், புது வகை கதை சொல்லலில், இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, “விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகாதது குறித்து வருத்தம் இருக்கிறது. அப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நான் நடித்த ‘ஜிப்ஸி’ படத்துக்கு சென்சார் 48 கட் கொடுத்தது. அந்தப் பிரச்சினையை முடித்துக்கொண்டு படத்தை வெளியிட்டால், கரோனா எங்களை காலி செய்து விட்டது” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT