தமிழ் சினிமா

தாய் கிழவி: விமர்சனம் - ராதிகா அசத்தும் கலகல என்டர்டெய்னர்!

டெக்ஸ்டர்

‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய பட்ஜெட்களில் நல்ல கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தாய் கிழவி’ எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

கருமாத்தூர் எனும் கிராமத்தில் வாழும் முதிய பெண் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்). கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குக் கடன் கொடுத்த பணத்தை வசூலித்துக் கொண்டு, ஊரையே தனது கட்டுக்குள் வைத்திருப்பவர். இவருக்கு விஜயன் (அருள்தாஸ்), உப்பிலியன் (சிங்கம்புலி), செல்வம் (பாலா சரவணன்) என மூன்று மகன்கள். திடீரென பவுனுத்தாயி நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுகிறார்.

தனது சொத்துகளில் மகன்களுக்குப் பங்கு இல்லை என அவர் முன்பே அறிவித்திருந்தாலும், 160 சவரன் தங்க நகைகளை அவர் ரகசியமாகச் சேர்த்திருப்பதாக மகன்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் முதலில் தாய் இறக்கவேண்டும் என்று நினைக்கும் மகன்கள், தங்கத்தை பற்றி கேள்விப்பட்டதும் அவரை காப்பாற்ற துடிக்கின்றனர். அவர்களால் தங்கள் தாயை காப்பாற்ற முடிந்ததா? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

          

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்கள் அவ்வப்போது தங்களின் தனித்துவமான திரைக்கதை மூலம் ஆச்சரியப்படுத்துவது உண்டு. அந்த வரிசையில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் நகைச்சுவை, சென்டிமென்ட், ஆழமான சமூகக் கருத்துகள் என சரியான விகிதத்தில் கலந்து ஒரு தரமான திரை விருந்தை கொடுத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் பாதி முழுக்க நகைச்சுவை, இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் என ஒரு நேர்த்தியான திரைக்கதையை எழுதி தனக்கென ஒரு மிகச் சிறந்த தொடக்கத்தை பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தான் அடுத்து நடிக்கும் இரண்டு படங்களையும் இயக்கும் வாய்ப்பை சிவகுமார் முருகேசனுக்கே கொடுத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

படம் முழுக்க கமல்ஹாசனுக்கு ட்ரிபியூட் போல பயன்படுத்தப்பட்டிருக்கும் பாடல்கள் செம்ம ஐடியா. அவை படம் முழுக்க புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இன்டர்வெல் காட்சியில் ‘விஸ்வரூபம்’ பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும் இடம் ‘ப்ளாஸ்ட்’ ரகம். 

படத்தில் ராதிகாவின் அசத்தலான நடிப்பு பெரும் பலம். பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் அவர் காட்டும் கம்பீரம், அதிகாரத் தோரணை,நையாண்டி கலந்த பேச்சு மிகச் சிறப்பு. ஆரம்பம் மற்றும் இறுதிக் காட்சி தவிர படம் முழுக்க படுக்கையிலேயே இருந்தாலும் படம் முழுக்க அவரது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அவரது திரைப் பயணத்தில் மற்றொரு மைல்கல் இந்த ‘பவுனுத்தாயி’.

சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ்காந்த் ஆகிய நால்வரும் தான் படத்தின் மற்றொரு முக்கிய தூண்கள். குறிப்பாக பால சரவணன் முதல் பாதி நகைச்சுவையில் மட்டுமின்றி, இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

முத்துகுமார், ரேச்சல் ரெபக்கா, அவரது மகனாக வரும் சிறுவன், மூன்று மருமகள்கள், பூசாரியாக நடித்திருப்பவர் என படத்தில் வரும் அனைவரும் இயல்பான நடிப்பை தந்திருக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் போலவே தெரியாத அளவுக்கு திரைக்கதையை மிகத் தெளிவாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இறுதியில் வரும் பெண்களுக்கான வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. உபதேசம் செய்வது போன்ற உணர்வு தராமல், பல இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் உணர்வுபூர்வமாகவும் கருத்தை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. 

நிவாஸ் கே, பிரசன்னாவின் பின்னணி இசை கிராமத்துச் சூழலுக்கு உயிர் கொடுத்துள்ளது. படத்தின் தொடக்கத்தில் வரும் முருகனைப் பற்றிய அந்தப் பாடல் ஈர்க்கிறது. விவேக் விஜயகுமாரின் கேமரா, மதுரை சுற்றுப்புற கிராமங்களின் அழகை கண்களுக்கு விருந்தாக்குகிறது.

மருமகள் கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கு ஈடாக அவர்களின் முந்தைய காட்சிகள் அமையவில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. குறிப்பாக ஒரே இரவில் பலரும் திருந்துவது போன்ற காட்சி எடுபடவில்லை. 

பெண்களுக்கான சொத்துரிமை, பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்ற விஷயங்களை வலிந்து திணிக்காமல், குடும்பத்துடன் அமர்ந்து கலகலப்பாக சிரிக்கவும், சிந்தித்து ரசிக்கவும் வைக்கிறது ‘தாய் கிழவி’.

SCROLL FOR NEXT