சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது ‘தாய் கிழவி’ குறித்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது மனதையும் தொடும். ரொம்ப நன்றாக இருக்கிறது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இது உண்மையில் உங்கள் முதல் படமா? நமது சமூகத்துக்கு நீங்கள் என்ன ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்... இவ்வளவு கண்ணியமான நகைச்சுவை மற்றும் எளிமையுடன். உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிந்தனை மற்றும் செயல்முறை உங்களது கதாபாத்திரத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமையாளருக்கு அவர் உண்மையிலேயே தகுதியான மேடையை வழங்கியதற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது திறமையையும் பற்றிய படத்தை உருவாக்கியதற்கு நடிகைகள் குழுவினர் சார்பாக நன்றி. பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை உங்கள் நட்சத்திர சக்தியுடன் ஆதரித்ததற்கு நன்றி.
நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ராதிகா சரத்குமார்! மிகவும் உத்வேகம் தருகிறீர்கள்! இந்த வேடத்தில் உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைத்துள்ளீர்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை.
’தாய் கிழவி’ வெறும் சக்தி வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் மட்டுமல்லாமல், மிகவும் அழகானவராகவும் இருந்தார், அவர் திரைக்கு வெளியே ராதிகாவின் பிரதிபலிப்பு. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், உங்கள் குரல் மாற்றம், உங்கள் சிரிப்பு, வசனம் மற்றும் உங்கள் சிறிய சைகைகள் மூலம் எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டீர்கள்.
இது ஒரு நடிகராக உங்களை வேறுபடுத்துகிறது! எனக்கு ’தாய் கிழவி’ என்பது பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.