கவனம் பெற்ற ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. இப்படத்தின் டைட்டில் டீஸரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக் ஷனில் தீவிரமாக இருக்கிறது, டீம்! செல்வகுமார் திருமாறனிடம் பேசினோம்.
‘டெக்ஸாஸ் டைகர்’... எதுக்கு இப்படி ஒரு டைட்டில்?
இப்போ சோஷியல் மீடியால சிலர் அவங்களுக்குன்னு அடைமொழியோட ‘புரொஃபைல்’ பெயர் வச்சிருப்பாங்கள்ல, அப்படியொரு பெயர்தான் ‘டெக்ஸாஸ் டைகர்’. அந்த பெயருக்குள்ளயும் கதைப்படி ஒரு விஷயம் இருக்கும். இப்ப சமூக ஊடக மோகத்துல இருக்கிற பெரும்பாலானவங்க குறுக்கு வழியில புகழ்பெறணும்னு நினைக்கிறாங்க. அதுக்காக தங்களோட நிஜமான திறமையை விட்டுட்டு, போலியான விஷயங்களை பண்ண ஆரம்பிக்கிறாங்க.
அதிலிருந்து வெளியே வந்து, உங்க திறமையைக் கண்டுபிடிச்சு, உங்களை நீங்க உணரணும்ங்கறதை இதுல சொல்றோம். எப்படியாவது புகழ் கிடைச்சா போதும்னு நினைக்கிற ஹீரோ, ஓர் இசைக் கலைஞர். சரியான வார்த்தைகள், வழக்கமான இசையை அமைச்சு பாடல் உருவாக்குனா, புகழ் பெற முடியாதுன்னு நினைக்கிறார். அதுக்கு அவர் என்ன பண்றார்; அதனால அவருக்கு என்ன பிரச்சினை வருதுங்கறதுதான் படம்.
ரொம்ப டிரெண்டிங்கான சப்ஜெக்டா இருக்கே..?
உண்மைதான். இப்போ சோஷியல் மீடியால நம்ம கண்ணுக்கு தெரிஞ்சு நிறைய வெறுப்புகளை அத்துமீறி பரப்புறாங்கள்ல, அதை எப்படி கடந்து போகலாம், அதை எதிர்கொள்றதுங்கற விஷயத்தையும் இதுல பேசியிருக்கோம். இன்றைய இளைஞர்கள் எல்லோருமே இந்தக் கதையோட ‘கனெக்ட்’ பண்ணிக்க முடியும். படத்துல எல்லா விதமான எமோஷன்ஸும் இருக்கு.
இதோட கதை, இங்க ஆரம்பிச்சு இப்படி முடியணும்னு நாங்க முடிவு பண்ணாம, திரைக்கதையை எழுதியிருக்கோம். அதாவது, கதாபாத்திரப் பின்னணியில படம் நகரும். ஒரு கதாபாத்திரம் தன்னோட பயணத்தை எங்க ஆரம்பிக்குது; அப்புறம் என்ன சிக்கலை சந்திக்குது? அதுல இருந்து எப்படி மீளுதுன்னு?ன்னு திரைக்கதை இருக்கும்.
ஹீரோவா ஹிருது ஹாரூணை எப்படி தேர்வு செஞ்சீங்க?
இந்த கதைக்கு 24-25 வயசுள்ள ஒரு ஹீரோ வேணும். அப்படியான ஹீரோவைத் தேடினேன். பிரதீப் ரங்கநாதன், கென் கருணாஸ் மாதிரி சிலர் இருக்காங்க. அடுத்த கட்டத்துல இதே மாதிரி இளம் நடிகர்கள் யார் இருக் காங்கன்னு பார்த்தா, யாருமே இல்லை.
அல்லது 35 வயசுக்கு மேல இருக் கிற ஹீரோவை கிளீன் ஷேவ் பண்ணி, 25 வயசு பையனா காட்டுறது கடினமா இருந்துச்சு. அதனால அடுத்தக்கட்டமா யாருன்னு யோசிச்சப்ப, ஹிருது ஹாருண் மனசுல வந்தார். அவர் இந்த கேரக்டருக்கு சரியா பொருந்தியிருக்கார்.
கதை முழுவதும் சோஷியல் மீடியா பத்திதான் போகுமா?
இல்லை. இதுல இசைக்கு முக்கியத்துவம் இருக்கு. நாம 90- கள்ல ஒரு மாதிரியான இசையை கேட்டிருப்போம். இப்ப என்ன மாதிரியான இசையை கேட்டுக்கிட்டிருக்கோம்? இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? இப்போ இருக்குறது உண்மையிலேயே மியூஸிக்தானா? இல்லைனா அது சும்மா கடந்து போகிற விஷயமா மாறிடுச்சா? இந்த மாதிரி விஷயங்களையும் பேசியிருக்கோம். அதே நேரம் சமூக ஊடகங்களோட நன்மை, தீமை பற்றியும் சொல்லியிருக்கோம். கதைக்குள்ள நிறைய லேயர் இருக்கும்.
இப்ப ஒரு புகைப்படத்தை சமூக ஊடகத்துல போஸ்ட் பண்ணும்போதோ, இல்லை ஏதாவது ஒரு விஷயத்தை பகிரும்போதோ, நிறைய நெகட்டிவ் கருத்துகள் வரும். யாரோ ஒருத்தர் ஏதாவது திட்டி கருத்தைப் போடுவாங்க. யார் இப்படி போட்டிருக்காங்கன்னு போய் பார்த்தா, அது ஃபேக் ஐ.டி.யாக இருக்கும். ஆனா, அந்த எதிர்மறை கருத்து. நம்மோட அன்றைய நாளை முழுசா கொன்னுரும். நாம கடுப்பாகறது மட்டுமில்லா, நம்ம பக்கத்துல இருக்கறவங்களையும் நாம பாடாய்படுத்துவோம்ல, இதுதான் இந்தக் கதைக்கான ஆரம்பமா இருந்துச்சு.
நீங்க இயக்கிய ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தை உங்க ஃபேமிலிதான் தயாரிச்சாங்க... இந்தப் படம் எப்படி?
‘ஃபேமிலி படத்’தை நாங்க ஃபேமிலியா தயாரிச்சதைப் பார்த்துட்டு ‘நானும் உங்க ஃபேமிலிக்குள்ள ஒருத்தரா வரேன்’னு ஆசைப்பட்டு ஒரு நண்பர் முதலீட்டோட வந்தார். நாங்களே அதற்கு முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டு இந்தப் படத்தை முடிச்சிருக்கோம். ஷூட்டிங் முடிஞ்சிருச்சு.
அக்டோபர்ல ரிலீஸ்க்கு பிளான் பண்ணிருக்கோம். இதுல சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, அந்தோணி தாசன், ‘பிக் பாஸ்’ சம்யுக்தான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. கண்டிப்பா இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கிற விதமா இருக்கும்.