சுசி கணேசன் இயக்கி வந்த ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘விரும்புகிறேன்’, ‘ஃபைவ் ஸ்டார்’, ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ படங்களின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சுசி கணேசன்.
இவர் கடைசியாக ‘திருட்டுப்பயலே 2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடித்திருந்த இந்தப் படம், 2017-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு படம் இயக்காமல் இருந்த சுசி கணேசன் சமீபத்தில் ‘ஒரண்ட’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையும், தனது பிறந்தநாளையும் படக்குழுவுடன் ஒன்றாக கேக் வெட்டி இயக்குநர் சுசி கணேசன் கொண்டாடியுள்ளார்.
தலைப்பு மட்டும் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் முதல் தோற்றம், வெளியீட்டு தேதி போன்ற விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.