தமிழ் சினிமா

“போலி ஐடிகளில் மறைந்து கொண்டு…” - ‘பராசக்தி’ விமர்சனங்கள் குறித்து சுதா கொங்கரா காட்டம்

ப்ரியா

சென்னை: ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “திரைப்படத்தை அது சேர வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மேலும், சந்தைப்படுத்தல் மிகுந்த இந்த காலகட்டத்தில் நான் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். நமது திரைப்படம் அதுவாகவே பேச அனுமதிப்பது மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. பொங்கல் வார இறுதியில் இது பெரும் வரவேற்பைப் பெற்று, அதிக மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

அடையாளம் தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அவதூறு பரப்புதல், மிக மோசமான வகையில் அவமானப்படுத்துதல் போன்ற செயல்கள் நடக்கின்றன. நாம் இதை எதிர்கொள்ள வேண்டும். இது எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்பது நமக்கு தெரியும்.

ட்விட்டரில் வந்த ஒரு கமென்ட்டை நான் உங்களுக்கு படித்து காட்டுகிறேன். "சென்சார்கிட்ட சான்றிதழ் வாங்குறது பெருசு இல்ல. அண்ணா ஃபேன்ஸ் கிட்ட சாரி கேட்டுட்டு மன்னிப்பு சான்றிதழ் வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு. அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி ஓடும்” இவ்வாறு சுதா கொங்கரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

சுதாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கபடாததையடுத்து அந்த படம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தே ஆன்லைனில் விஜய் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் மோதல் நிலவியது.

இந்த சூழலில் ‘பராசக்தி’ படம் வெளியான பிறகு வேண்டுமென்றே அப்படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் சுதா கொங்கராவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

SCROLL FOR NEXT