தமிழ் சினிமா

சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன்; ‘புறநானூறு’ டு ‘பராசக்தி’ - சுதா கொங்காரா பகிர்ந்த சம்பவங்கள்

ஸ்டார்க்கர்

சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி உள்ளே வந்தார், ‘புறநானூறு’ எப்படி ‘பராசக்தி’ படமாக மாறியது என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்காரா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் முதலில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘புறநானூறு’ என்ற பெயரில் உருவாவதாக இருந்தது. அதில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

‘புறநானூறு’ படம் நடைபெறாமல் போனது ஏன், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி உள்ளே வந்தார் உள்ளிட்ட விஷயங்களை பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் சுதா கொங்காரா. அப்பேட்டியில், “கரோனா காலத்தில் சூர்யாவிடம் சொன்ன கதை இது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த மதிமாறனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அந்தச் சமயத்தில் நிறைய கதைகள் பேசினோம். அப்போது எனக்கு இந்தக் கதை ரொம்பவே பிடித்திருந்தது.

எனக்கு சூர்யா தான் நெருங்கிய நண்பர் என்பதால் உடனடியாக அவரிடம் சொன்னேன். அவருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. அந்தச் சமயத்தில் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. ஒரு பிரச்சினை என்னவாக இருந்தது என்றால், சூர்யாவிடம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு செய்வதற்கு தேதிகள் இல்லை. இக்கதையினை தொடர்ச்சியாக படமாக்கவில்லை என்றால் படத்தின் செலவு என்பது ரொம்பவே அதிகரித்துவிடும்.

முன்பே சிவகார்த்திகேயனுக்கு ஏதேனும் கதை இருக்கிறதா என்று தயாரிப்பாளர் அருண் விஸ்வா கேட்டிருந்தார். ‘புறநானூறு’ நடைபெறவில்லை என்றவுடன் மீண்டும் கேட்டார். அப்போது தான் சிவகார்த்திகேயனை சந்தித்து இக்கதையை ஐடியாவை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் பண்ணலாம் என்று கூறிவிட்டார். தேதிகள் கொடுக்கிறேன், நீங்கள் எங்குச் சொன்னாலும் கையெழுத்திடுகிறேன் என்று கூறினார் சிவகார்த்திகேயன். அப்படித்தான் சிவகார்த்திகேயன் இக்கதைக்குள் வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT