கொண்டாடத் தகுந்த தரமான படம் என்று ‘மொத ராத்திரி’ படத்தை நடிகர் சிம்பு பாராட்டி உள்ளார்.
தற்போது ‘அரசன்’ படத்தில் நடித்து வரும் சிம்பு சமீபத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளர். அதில் அவர், ‘‘மொத ராத்திரி’ படம் பார்த்து மிகவும் ரசித்தேன்.
நாம் அடிக்கடி பிற மொழிகளில் அருமையான, சின்ன படங்களைப் பார்த்து அவற்றை வெகுவாக கொண்டாடுவோம். ஒரு சிறிய குழு தமிழில் புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது அதே அன்பையும் ஆதரவையும் நாம் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
கிராமத்து திருமணத்தை மையாமாகக் கொண்டு ஒரே இரவில் நடக்கும் கதை. அதில் வரும் ஏராளமான கதாபாத்திரங்கள், சின்ன சின்ன தருணங்கள் ஒரு இயல்பான உணர்வைத் தருகின்றன. படத்தின் எழுத்து, நகைச்சுவை, மக்கள் ஒருவருக்கு ஒருவர் உறவாடும் விதம், எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றன.
ஒரு புது இயக்குநர், ஒரு புது குழு மண் வாசத்துடன் சுவாரஸ்யமாக ஒரு படைப்பைக் கொடுத்திருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவுக்கு எனது பாராட்டுகள்.
அதேநேரத்தில் நமது தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இது மாதிரியான படங்கள் ரசிகர்களைச் சென்று சேர கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. தரமான படங்கள் கொண்டாடப்படுவதற்கு தகுதியானவை.
என்னுடைய ரசிகர்களுக்கும் சினிமா காதலர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... ‘மொத ராத்திரி’ படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆதரவு தருங்கள்.
மேலும், பல வெற்றிகள் பெற படக்குழுவுக்கு வாழ்த்துகள். இன்னும் தரமான படங்களை உருவாக்குங்கள்’ என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் என பலர் நடித்துள்ள படம் ‘மொத ராத்திரி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் சங்கர் இசை அமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.