சசிகுமார் - சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘டெத் ரயில்வே’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘டெத் ரயில்வே’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘குறைவான பட்ஜெட்டில் சரியான பார்வை மற்றும் திட்டமிடலும் இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதைக் காட்டிய ‘யாத்திசை’ திரைப்படக் குழு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கும் கதையின் பின்னணியில் ‘டெத் ரயில்வே’யுடன் மீண்டும் வந்துள்ளனர்.
இந்தப் படம் அவர்களுக்கு தகுதியான அங்கீகாரத்தை பெற்று தரும் என நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பர்மா - தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைத்தது. இந்தப் பின்னணியில் ‘டெத் ரயில்வே’ படம் உருவாகி உள்ளது. டீசரில் அவைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கு விதம் கவனம் ஈர்த்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரகனியுடன் பவானி, கிஷோர், அசோக் செல்வன் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்ய, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படம் விரைவில் திரையரங்குக்கு வர உள்ளது.