கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளது கார்த்தி - பி.எஸ்.மித்ரன் கூட்டணி. தமிழில் ஸ்பை த்ரில்லர் படங்கள் குறைவு என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இக்கதையும் நகர்கிறது. ‘ரா’ உளவு அமைப்பில் சரியாக செயல்படாததால், விஜய் பிரகாஷ் என்னும் விஜி (கார்த்தி) தனது சகாக்களுடன் (யோகி பாபு, நிழல்கள் ரவி, தேவதர்ஷினி) ஒரு ‘டம்மி’ டீமுக்கு மாற்றப்படுகிறார். இதற்கிடையே, வால்ரஸ் (அச்யுத் குமார்) என்ற பெயரைக் கொண்ட, தலைமறைவாக இருக்கும் ஒரு முன்னாள் ஏஜென்ட்டை ‘ரா’ அமைப்பு தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறது.
தன் பங்குக்கு தனியாக அவரை தேடும் விஜி ஒரு கால்நடை மருத்துவர் (ஆஷிகா ரங்கநாத்) உதவியுடன் ‘டோகு’ என்ற ஆபத்தான உயிரியல் ஆயுதத்தைப் பற்றியும், அதைத் தன்வசப்படுத்தத் துடிக்கும் யோகி (எஸ்.ஜே.சூர்யா) தலைமையிலான 'பிளாக் டாகர்' என்ற கூலிப்படையைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார்.
இந்த 'டோகு' ஆயுதத்துக்கும், தலைமறைவாக இருக்கும் விஜியின் தந்தையான சர்தாருக்கும் ஒரு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த ஆபத்தான ஆயுதம் தவறான நபர்களின் கைகளில் சென்றுவிடும் என்பதை அறிந்து சர்தாரும் மீண்டும் களத்துக்கு வருகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘சர்தார் 2’ படத்தின் கதை.
எந்த ஒரு படத்துக்குமே முதல் பாகம் வரும்போது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்காது. அதனால் அதில் உள்ள சின்ன சின்ன குறைகளை யாரும் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள். ‘சர்தார்’ படத்திலும் திரைக்கதையில் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், படம் ஓரளவு சுவாரஸ்யமாக இருந்ததால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால், அதே சலுகை ‘சர்தார் 2’ படத்துக்கு நிச்சயம் கிடைக்காது. ஏனெனில், இந்த முறை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைப்பதோ, முதல் பாகத்தை விட பல மடங்கு ஓட்டைகளும், எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையும் தான். முந்தைய பாகத்தை விட பட்ஜெட்டும் பிரம்மாண்டமும் தான் கூடியிருக்கிறதே தவிர, திரைக்கதையின் தரம் கூடவே இல்லை.
காணாமல் போகும் ஏஜென்ட், ஆபத்தான உயிரியல் ஆயுதம், அதை அடையத் துடிக்கும் வில்லன் என படத்தின் தொடக்கம் சுவாரஸ்யமாகவே ஆரம்பித்தாலும் அந்த சுவாரஸ்யத்தை அடுத்தடுத்த காட்சிகள் தக்கவைக்க தவறுகின்றன. படுசீரியஸாக தொடங்கும் காட்சிகள், தமிழ் சினிமா வழக்கப்படி ஹீரோவின் மொக்கையான குழுவினரால் (யோகிபாபு, நிழல்கள் ரவி) காமெடிக்கு மாறுகின்றன. நடிப்பு தொடங்கி, காட்சியமைப்புகள் என அனைத்தும் படுசெயற்கை.
படத்தில் காட்டப்படும் 'ரா' அமைப்புக்கு சொந்த ஏஜென்ட்களை வேட்டையாடுவதை தவிர வேறு வேலையே கிடையாதா? ஒரு மிகப் பெரிய ஆபத்தை பற்றி தகவல் சொல்லும் சொந்த அதிகாரிகளையே அந்த அமைப்பு நம்ப மறுக்கிறது. படத்தின் ரா, டிஆர்டிஓ போன்ற அமைப்புகளை எந்த அளவுக்கு டம்மியாக காட்டமுடியுமோ அந்த அளவுக்கு டம்மியாக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். டிஆர்டிஓ நிகழ்வு ஒன்றில் வில்லனின் ஆட்கள் ஏதோ சர்க்கஸ் கூடாரத்துக்குள் கயிறு கட்டி இறங்குவது போல இறங்கி முக்கியமான விஞ்ஞானியை அதே கயிற்றில் தூக்கிச் செல்கின்றனர்.
தேவையில்லாத காதல் காட்சிகளோ, பாடல்களோ இல்லாதது ஆறுதல். ஆரம்பத்தில் வரும் சேஸிங் காட்சி விறுவிறுப்பாக உள்ளது. இடைவேளைக்கு முன்பு சர்தார் கார்த்திக்கு கொடுக்கப்படும் மாஸ் என்ட்ரி காட்சி அப்ளாஸ் ரகம்.
இப்படத்தின் ஒரே பலம் கார்த்தி மட்டும்தான். இரண்டு கதாபாத்திரங்களிலுமே அவர் முழு அர்ப்பணிப்போடு நடித்து தன் உழைப்பைத் திரையில் காட்டியுள்ளார். சர்தாராக கம்பீரத்தை கொண்டு வந்து சீரியஸ் காட்சிகளை தாங்கி பிடிக்கிறார்.
வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வரும் ஆரம்ப காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகின்றன. ஆனால் சலிப்பான திரைக்கதையை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் ஆழமாக எழுதப்படவில்லை. இரண்டாம் பாதியில் அவர் வில்லத்தனம் செய்வதற்கான காரணம் மேலோட்டமாக மட்டுமே இருப்பதால், அவராலேயே மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பது தெரிகிறது. அச்யுத் குமார், நாசர், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
டோகு ஆயுதத்தால் சர்தாரின் கடந்த காலத்தில் மிகப்பெரிய வடு ஏற்பட்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட விஷயம் முதல் பாகத்தில் ஒரு இடத்தில் கூட ஏன் சொல்லப்படவில்லை என்பது விசித்திரமாக உள்ளது. சர்தார் தனது முதல் மிஷனிலேயே இவ்வளவு பெரிய தவறையும் குளறுபடியையும் செய்த பிறகும், அவரை எப்படித் தொடர்ந்து 'ரா' அமைப்பில் வைத்திருந்தார்கள்?
ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் கடும் உழைப்பு வெளிப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் பின்னணி இசை மிகப்பெரிய ஏமாற்றம். சில காட்சிகளில் சீரியல் பின்னணி இசை போல சம்பந்தமே இன்றி ஒலிக்கிறது. பாடல்கள் தேறவில்லை. படத்தின் கிராபிக்ஸ் (அல்லது ஏஐ?) படு சொதப்பல். டெக்னிக்கலாக மற்ற விஷயங்களில் பாஸ் மார்க் வாங்கும் படம், கிராபிக்ஸில் ஜீரோ மார்க் பெறுகிறது.
ஆன்டிபயாடிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது குறித்த மெசேஜ் புதிதாக இருந்தாலும், அதை திரைக்கதையில் சொல்ல வேண்டிய விதத்தில் ஷார்ப் ஆக சொல்லாமல் போனதால் வெறும் வாட்ஸ்-அப் செய்தி போல திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இரண்டாம் பாதியில் பார்வையாளர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களையே திரும்பத் திரும்ப சொல்வது ஏன்?
ஒரு சராசரி பார்வையாளர் கூட ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் மீறல்கள் படம் முழுக்க நிறைந்துள்ளன. ஒரு ஸ்பை த்ரில்லரில் கதாநாயகன் தோற்றுவிடக் கூடாது என்ற பய உணர்வு பார்ப்பவர்களுக்கு வர வேண்டும். ஆனால் ‘சர்தார் 2’ அதை செய்யவே இல்லை. இதனால் இந்த ஸ்பை த்ரில்லர் சலிப்பூட்டும் த்ரில்லராக மாறி நிற்கிறது.