கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன், வினோத் ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘அங்கம்மாள்’.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை விபின் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ளார். டிச.5ல் (நாளை) வெளியாகும் இப்படத்தில் தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கை கள் ஆகியவற்றை ‘அங்கம்மாள்’ கதாபாத்திரம் மூலம் பிரதி பலித்திருக்கிறார் கீதா கைலாசம்.
இதுபற்றி கீதா கைலாசம் கூறும்போது, “அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்வுடன் வடிவமைத்த இயக்குநருக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க அனுமதித்தார்.
சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. படப் பிடிப்பில் ‘சிங்- சவுண்டு’டன் நடிக்க வேண்டியிருந்ததால் நாங்கள் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.