பேஸ்புக்கில் தனது பெயரில் போலியாக கணக்குத் தொடங்கி பணம் வசூலித்து மோசடி செய்துவருவதாக நடிகை ரித்திகா சிங் எச்சரித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்ஸ்டாகிராமில் உள்ள எனது ஒரே அதிகாரப்பூர்வக் கணக்கு இதுதான். இதில் அனைத்து விஷயங்களையும் நேரடியாக நானே பகிர்கிறேன். ஆனால், ஃபேஸ்புக்கில் எனது பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் மாதம் ரூ.400 கட்டணத்தில் ‘சப்ஸ்கிரிப்ஷன்’ முறையை நடத்தி வருகின்றனர்.
மக்களும் அதற்காகப் பணம் செலுத்தி வருகின்றனர். அது என்னை அவமதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. அதில் என்னைப்போலவே தோற்றமளிக்கும் அச்சு அசலாக உண்மையானது போலத் தோன்றும் ஏஐ வீடியோக்களும் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு ஆபத்தானதாக மாறிவிட்டது. தனிப்பட்ட ஒருவரின் நற்பெயரைக் குலைக்கும் வகையிலான வீடியோக்கள் தற்போது உருவாக்கப்படுகின்றன.
எனது குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ பார்த்தால் கூட, அது நான் அல்ல என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்த உண்மைகளை வெளிப்படுத்தவே இப்போது முன்வந்துள்ளேன்.
இதுபோன்ற பக்கங்கள் உங்கள் கவனத்துக்கு வந்தால் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம், ‘சப்ஸ்கிரிப்ஷன்’ செய்ய வேண்டாம். தயவுசெய்து அந்தப் பக்கம் குறித்து புகாரளித்து, அதை அகற்ற உதவுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.