சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 839 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தூத்துக்குடி எம்எல்ஏ-வாக பதவி வகித்த என்.பெரியசாமி, அவரது மனைவி எபினேசர் அம்மாள், மகளும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், கீதா ஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில், எஞ்சிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் விடுவித்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2022-ல் தீர்ப்பளித்தது.
839 நாட்கள் தாமதம்
இந்த தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடி தொகுதி வாக்காளரான சண்முகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 839 நாட்கள் தாமதமாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. தாமதத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.