`29’ படத்தின் கதை உருவான விதம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் விவரித்துள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘29’. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, “‘மேயாத மான்’ படத்தை முடித்த பிறகு ஒருநாள் வீட்டில் இருந்தபோது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. ஃபேஸ்புக்கில் 'வாட்ஸ் இன் மைண்ட்' என்றுதான் ஒரு விஷயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது.
ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் ஓர் உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்திருந்தது . அதில் 'அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்' என்று சிலர் பதிவிட்டனர்.
அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.
சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள் என்று ஓர் இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ். இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.
அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு' என்றார்.
இதேதான் நான் என்னுடைய ‘மது’ குறும்படத்தை யூடியூபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த ‘மது’, ‘மேயாத மான்’ படமாக ஆனதை போல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விஷயங்கள் தற்போது ‘29’ எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது. நான் கதை எழுத உட்கார்ந்தபோது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.
கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்தப் படம் இல்லை. அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்ஷன் ஓரியன்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ ‘29’ படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.
அடையாளத்தை நாம் வாங்க முடியாது, அதுவாக அமைவது தான். நான் யார் என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும்போது தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.
எனக்கு 29 வயதில் தான் நிறைய விஷயங்கள் நடந்ததால், இப்படத்தின் டைட்டில் ‘29’ என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். ‘29’ எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா, பஸ் நம்பரா, ஏதேனும் ஒரு நாளா, அதெல்லாம் இல்லை. இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது” என்று விவரித்துள்ளார் ரத்னகுமார்.