நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா கணவரைப் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவி வந்தது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ‘‘நாங்கள் திருமண பந்தத்தில்தான் இருக்கிறோம். ஆனால், வசதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம். நான் டி.வி. தொடரில் நடித்தபோது என் மகன் வளர்ந்து கொண்டிருந்தான்; அப்போது ஹைதராபாத்தில் இருந்தோம். நான் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் செல்வேன்.
அது எனக்கும் என் மகனுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. நான் ஹைதராபாத்தை விட்டு வரும்போது அவன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டான். அதனால், கிருஷ்ண வம்சியிடம் பேசி, அவனை சென்னையிலேயே படிக்க வைக்க முடிவு செய்தேன். அது எங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் நல்ல நண்பர்களைப் போல இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் இன்னும் திருமண பந்தத்தில் தொடர்கிறோம்” என்றார்.